பக்கம்:அங்கும் இங்கும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

89

எட்டாம் வகுப்பு நிலைக்குக் கற்றனர். நின்றனரா அதோடு ? தொடர்ந்து படித்தனர். பள்ளியிறுதிவரை படித்துத் தேறினர். தொடர்ந்து, மேல் படிப்பும் படித்து வெற்றி பெற்றவர், எண்ணற்றவர்.

சோவியத் ஆட்சியிலேயே, முதல் முதல் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டு தொடர் கல்வியால் வளர்ந்தவர்கள் பாட்டாளிகளும் உழவர்களுமே. நகர்ப்புறப் பாட்டாளிகள் மட்டுமல்ல ; நாட்டுப்புற, சிற்றாள் தொழில் புரியும் பாட்டாளிகளும், பண்ணைகளில் பாடுபடும் உழவர்களும் இவ்வழியில் வளர்ந்துள்ளனர். ஆண்களைப் போலப் பெண்களும் சோவியத் கல்வி வெள்ளத்தின் பலனை நிறையப் பெற்றுள்ளனர் ; பெறுகின்றனர் ; இனியும் பெறுவர். ஏழு கோடியே எழுபது இலட்சம் பேர் இப்போது இங்குக் கல்வி கற்று வருவதாகக் கூறினேன். அவர்களில் நான்கு கோடியே பத்து இலட்சம் மக்கள் தொழில் புரியும் தொழிலாளி மக்களும் பணிபுரியும் பண்ணையாட்களும் ஆவர். மற்றவர்கள் சிறுவர். சிறுமியர், இளைஞர், காளையர் உட்பட, மூன்று கோடியே அறுபது இலட்சம் பேர்களே; இப்போது தெரிகிறதா, இந்நாடு உழைப்பாளிகளுக்கு உணவும் உடையும் உறையுளும் தேடிக் கொடுப்பதோடு நில்லாமல், கல்வி, மேலும் மேலும் கல்வி,, காலமெல்லாம் கல்வி, வாழ்நாள் முழுவதும் கல்வி கொடுக்கிறது என்ற உண்மை ?

“வாழ்க்கைத் தர உயர்விற்குப் பாடுபடுவதைப் போல், பொது மக்களின் கல்வியறிவு நிலையை உயர்த்துவதற்கும் இனிக் கவனஞ் செலுத்தி வருகிறோம் நாங்கள். போதிய கல்வியறிவே-காலத்திற்கேற்ப வளரும், மாறும், கல்வி அறிவே-பிற முன்னேற்றங்களுக்கும் வளர்ச்சிகளுக்கும் ஆணி வேர். அவ்வாணி வேர் இரண்டொருவரிடம் உறுதியாக இருந்தால் போதாது. பரவலாக எல்லாரிடமும் பரவியதாக