பக்கம்:அங்கும் இங்கும்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
94
 

பயிற்சி பெறவேண்டிய தொல்லை ஏற்படும். வேகம் தடைப்படும். ஒட்டைச் சட்டியை வைத்துக்கொண்டு கொழுக்கட்டை சுட்டாக வேண்டிய நிலை.

இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள். அது என்ன ? முதியோர் கல்விக்கு ஆசிரியர்களாகப் போகிறவர்களுக்கு அஞ்சல் மூலம் பயிற்சி கொடுப்பது.

அத்துறையில் அனுபவமுடைய சிலரைக் கொண்டு, பயிற்சிக் குறிப்புகளை, உபாயங்களை எழுதி அச்சிட்டு அஞ்சல் மூலம் அனுப்பினார்கள். ஆசிரியர்களின் ஐயப் பாடுகள் உரியவர்களுக்கு, அஞ்சல் மூலம் சென்றன. நிபுணர்கள் அவற்றைக் கவனித்து விளக்கமாகப் பதில் எழுதி அனுப்பினர். இப்படி அஞ்சல் மூலம் பயிற்சி கொடுத்ததால் ஏராளமானவர்களுக்கு. விரைவாகப் பயிற்சி கொடுக்க முடிந்தது. எழுத்தறிவிப்பு வேலையையும் பெரும் அளவில் தொடங்க முடிந்தது. இப்புதுத் துறையில் ஒரளவு அனுபவப்பட்ட பிறகு அங்கும் இங்கும் கருத்தரங்குகளில் கூடி, சிக்கல்களை அவிழ்த்து, முறைகளைச் செப்பனிட்டுக்கொண்டு விரைந்து முன்னேறினர். திடீரென வந்த போரைச் சமாளிக்க எத்தனை வேகமாக உள்ளதை வைத்து, ஏற்பாடு செய்வார்களோ அப்படிச் செய்தனர், எந்நாட்டிலோ உள்ள நிலையையும் பயிற்சியையும் மெதுவான போக்கையும் குறிக்கோளாகக் கொண்டு மெல்ல நடக்கிற காரியமா முதியோர் எழுத்தறிவிப்பு ?

படித்தவர்களில் கிடைத்தவர்கள் அனைவரையும் பயன் படுத்தி, ஏதோ ஒரளவு சுருக்கமான பயிற்சி கொடுத்து, முதியோர் வகுப்புகளைத் தொடங்கி விட்டார்கள். முதியோர், அக் கல்விக்கூடங்களுக்குச் சென்று கற்கவேண்டுமே! கல்விக் கூடம் போக என்ன செய்தார்கள் ?

நாடு முழுவதிலும் பிரசாரம் செய்தார்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்கள் ; அடுத்தடுத்து, நாடு முழுவதிலும், ஊர்தோறும் பிரசாரம் செய்தார்கள். செய்தவர் யார் ?