பக்கம்:அங்கும் இங்கும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

95


‘ஆட்சியாளர் ஆணையை அதிகாரிகளும் ஆசிரியர்களும் நிறைவேற்றட்டும்’, என்று கைகட்டிக் கொண்டிருக்க வில்லை, பொதுமக்கள். பிரசாரப் பொறுப்பை, கற்போரைத் திரட்டும் பொறுப்பை பொதுவுடைமைக் கட்சி ஏற்றுத் கொண்டது. கட்சியினரோ சிலர், மற்றவர்களோ பலர். அப் பலரும் பங்கு கொண்டனர். தொழிற் சங்கங்கள், ஆசிரியச் சங்கங்கள், மாணவர் கழகங்கள். எழுத்தாளர்கள், சொற் பொழிவாளர்கள் இப் புனிதப் பணியில் பெரிதும் ஈடுபட்டார்கள். படிப்பார்வத்தை முதியோரிடம் எழுப்பினர். அவர்களை இட்டுக்கொண்டு போய்க் கல்விக் கூடங்களில் சேர்த்தனர். ஒவ்வொருவரும் அவரவர் வாய்ப்புக்கு, ஆற்றலுக்கு ஏற்றபடி இதற்குத் துணை புரிந்தனர் என்று கேட்டபோது,

“ஆண்மையாளர்கள்
     உழைப்பினை நல்கீர் !
மதுரத் தேமொழி
     மாதர்கள் எல்லாம்
வாணி பூசைக்கு
     உரியன பேசிர்!”

என்ற மகாகவி பாரதியின் வேண்டுகோள் நினைவில் வந்தது.

இங்கும் ஊதியமில்லாமல் தொண்டாற்றக்கூடிய படித்த வர்களுக்குப் பஞ்சமில்லையே! ஒய்வு நேரத்தில் சமூகப் பணியாற்றக்கூடிய மாணவ மாணவிகளுக்காவது குறைவா ? எத்தனை கோடி ஆண்மையாளர், நம்மிலே! அவர்கள் ஏற்கக் கூடிய ஆக்கப்பணியல்லவா முதியோர் கல்வி !

திரண்டு வாரீர் தொண்டாற்ற வாரீர் ! எழுத்தறிவிக்க அறிவொளி பரப்ப வாரீர் !