பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/14

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியாவின் பூர்வ சரித்திர ஆராய்ச்சி

3


புராதன வஸ்து சாஸ்திரம் என்றால் என்ன? பண்டைக்கால நிலைமையின் அறிகுறியாக இத்தேசம் முழுமையிலும் பரந்து கிடக்கும் இடிந்த கோயில்கள், பாழான நகரங்கள், இன்னும் சிதையாத மற்ற சாதனங்கள், புதையலாய் நமக்கு அகப்படும் பற்பலவித நாணயங்கள், செப்புப்பட்டயங்கள், கல்வெட்டுகள், ஸ்தம்பங்கள், பிரதிமைகள் முதலிய வஸ்துக்களை “புராதன வஸ்து”[1] என்று நாம் இங்கு கூறுவோம். இவற்றிலிருந்து நம் ஆராய்ச்சியின் பயனாக நமக்குக் கிடைத்திருக்கும் அறிவே புராதன வஸ்து சாஸ்திரம்[2].

பூர்வ இந்திய
சரித்திரத்தின்
ஆதாரங்கள்
பூர்விக இந்திய சரித்திரத்தின் ஆதாரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது, ஐதிஹ்யம். அதாவது இந்தியாவிலுள்ள எல்லாவித கிரந்தங்களிலும் அடங்கிய விவரங்கள். சுருதி, ஸ்மிருதி, வேதாங்கங்கள், இதிகாஸம், புராணம், என்ற பலவகை கிரந்தங்களையும் இப்பிரிவில் நாம் அடக்குகிறோம். இந்தக் கிரந்தங்களைப்போலவே இவற்றில் அடங்கிய சமாசாரங்களும் அளவற்றவை.

இரண்டாவது, அந்நிய நாட்டார் இந்தியாவைப்பற்றித் தம் தம் பாஷைகளில் எழுதி வைத்துள்ள விவரங்கள் அலக்ஸாந்தருடனும் அதற்குப் பின்னும் வந்த யவன தூதர்களும் யவன தேசாந்தரிகளும் பாஹியன், யுவன்சுவங், இத்ஸிங் முதலிய சீன தேசாந்தரிகளும், தாங்கள் இத் தேசத்தில் கண்டதும் கேட்டதுமான செய்திகளை எழுதிவைத்திருக்கிறார்கள். அவை யாவும் அகப்படவில்லையாயினும் கிடைத்தவரையிலும் இவ் வாதாரங்கள் கால நிர்ணயத்துக்கு மிக முக்கியமானவை.

  1. † Antiquities புராதன வஸ்துக்கள்.
  2. ★ Archaeology