பக்கம்:அசோகர் கதைகள்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

அசோகர் கதைகள்

தெருக்களிலும் நடந்து, பல ஊர்களையும், வயல் வெளிகளையும் கடந்து ஒரே நோக்கத்தோடு சென்றுகொண்டிருந்தான்.

அவன் புறப்பட்ட ஐந்தாவது நாள் சாலையின் வழியில் ஒரு துறவியைக் கண்டான். காவியுடை உடுத்தியிருந்த அந்தத் துறவியின் தோற்றம் எடுப்பாக இருந்தது. சிங்கம் போல் நிமிர்ந்த பார்வையும், ஒளிநிறைந்த, கண்களும், புன் சிரிப்பு நெளியும் உதடுகளையுடைய வாயும், அந்த இளைஞனை எப்படியோ கவர்ந்து விட்டன.

"தலைநகரம் இன்னும் எவ்வளவு தொலையிருக்கிறது?’’ என்று இளைஞன் அந்தத் துறவியைக் கேட்டான்.

அன்புகனிந்த கம்பீரமான குரலில் அவர் அந்த இளைஞனைப் பார்த்து, "தம்பீ, தலைநகரத்துக்கு நீ எதற்காகப் போகிறாய்?" என்று கேட்டார்.

"அசோக மன்னரைப் பார்க்க” என்று சிறிதும் தயங்காமல் பதிலளித்தான் இளைஞன்.

"தம்பீ, பிச்சைக்காரனைப் போல் இருக்கும் உன்னை அரண்மனைச் சுற்றுப் புறத்திலேயே நெருங்க விட மாட்டார்களே! நீ எப்படி மன்னரைப் பார்க்கப் போகிறாய்?" என்று கேட்டார் துறவி.

"ஐயா, நீங்கள் தெரியாமல் சொல்லுகிறீர்கள். அசோக மன்னர் கருணையே உருவானவர். அவர் துன்பப்படுபவர்களின் துயர் தீர்க்கப் பிறந்தவர் என் கவலைகளைப் போக்கிக் கொள்ளவே நான் அவரைப் பார்க்கப் போகிறேன். எப்படியும் அவரைப் பார்ப்பேன். பலனும் பெறுவேன்!" என்றான் இளைஞன்.