பக்கம்:அசோகர் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை ஒன்று

11

அந்தத் துறவி அவனுடன் பேச்சுக் கொடுத்து அவனைப் பற்றிய முழு விபரங்களையும் தெரிந்துகொண்டார். அவனுக்கிருந்த கவலையெல்லாம் சோற்றுக் கவலை தான் என்பதையும் தெரிந்துகொண்டார்.

திரும்பவும் அவர் சொன்னார்: "தம்பீ, நீ அசோக மன்னரைப் பார்த்துவிட்டால் எப்படியும் அவர் உன் கவலைகளைத் தீர்த்துவிடுவார் என்பது உண்மைதான். ஆனால், அரண்மனைக் காவலர்கள், அசோக மன்னரைப்போல் இருப்பார்களா? அவர்கள், பிச்சைக்காரனைப் போன்ற உன்னே உள்ளே விடுவார்களா?" என்று கேட்டார்.

"அதையும் தான் பார்த்து விடுவோமே!" என்று பதிலளித்து விட்டு இளைஞன் மேலே நடந்தான்.

"தம்பி, மன்னரைப் பார்க்க முடிந்தால் பார். இல்லாவிட்டால் என் மடத்துக்கு வா!" என்று சொல்லி அந்தத் துறவி, தான் இருக்கும் புத்த மடாலயம் ஒன்றை அவனுக்குக் காண்பித்தார்.

'சரி' யென்று சொல்லிவிட்டு அந்த இளைஞன் சென்றான்.

துறவி சொன்னபடிதான் நடந்தது. தலைநகருக்குள் நுழைந்த இளைஞன் அரச வீதிக்குள் செல்லவே முடியவில்லை. நகர்க் காவலாளிகள் அவனை அந்த வீதியை விட்டுத் துரத்தினார்கள்.

"நான் மன்னர் பெருமானைப் பார்க்க வந்திருக்கிறேன்: என்னைப் போகவிடுங்கள்!” என்று அவன் காவலரிடம் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தான்.