பக்கம்:அசோகர் கதைகள்.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை ஒன்று

19

அவன் சோற்றுக் கவலையால் வாடியபோது, அசோகரைச் சந்திக்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். அவரைச் சந்தித்துத் தன் குறையைக் கூறினால் அதைத் தீர்த்து வைப்பார் என்று எதிர்பார்த்தான். ஆனால், இப்போது அவனுக்குச் சோற்றுக் கவலை கிடையாது. வேறு கவலை எதுவும் கிடையாது. எதைக் கூறுவான் அசோகரிடம்? விழித்துக் கொண்டு நின்றான்.

மன்னர் பேசினர்:

"தம்பீ! என்ன கவலை உனக்கு? ஏன் கூறத் தயங்குகிறாய்? கூசாமல் பேசு!" என்றார்.

அந்தக் குரல்கூட அவனுக்குப் பழக்கமான குரல் போலிருந்தது. ஆனால் மன்னர் பெருமானுக்கும் தனக்கும் என்ன பழக்கம்! ஏதோ மனத் தோற்றம் என்றெண்ணிக் கொண்டான்.

“மன்னர் பிரானே! வணக்கம்! எனக்கு எந்தக் கவலையும் கிடையாது. தங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆசைதான் இருந்தது. பார்த்து விட்டேன். இனி எனக்கு எந்தக் குறையும் இல்லை!" என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகப் புறப்பட்டான்.

"தம்பீ!" என்று ஒரு குரல் அழைத்தது. தனக்குப் பிழைக்கும் வழி சொல்லித்தந்த அந்தத் துறவியின் குரல் போன்றிருந்தது. குரல்வந்த திசை நோக்கித் திரும்பினான். அரியணையில் இருந்த அசோக மாமன்னர்தாம் "தம்பீ!” என்று அன்புடன் அழைத்தார்.

மாமன்னரே துறவியாக வந்து தன் கவலையைப் போக்க வழிகாட்டியவர் என்று அறிந்தபோது, அவனுக்குப் பெருமை கொள்ளவில்லை. ஒடிச் சென்று மன்னரின் காலடியில் வீழ்ந்து அவற்றைப் பற்றிக் கொண்டு கண்ணீர் சொரிந்தான்.