பக்கம்:அசோகர் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22

அசோகர் கதைகள்

அந்தக் காலத்து மக்களிடையே ஒரு நல்ல பண்பாடு இருந்தது. அதை நாம் தெரிந்துகொள்ள வேண்டியது இன்றியமையாதது. உழைத்து நாலு காசு சம்பாதிக்கக் கூடிய வலுவும் திறனும் உள்ள எவனும் தன்னை ஏழை யென்று கூறிக்கொள்ள மாட்டான். அவ்வாறு கூறிக் கொள்வதையோ, கூறப்படுவதையோ அவமானம் என்று கருதுவான். அற நிலையங்களிலே போய்க் கையேந்துவது தன் தகுதிக்குக் குறைவானதென்று கருதுவான். தான் அனுபவித்த வசதிக்குரிய கூலியைக் கொடுத்துவிட்டால் தான் அவன் மன அமைதியோடு இருப்பான்.

எதையும் சம்மா பெறக்கூடாது என்ற எண்ணம் அந்தக் காலத்து மனிதனின் பண்பாடாக விளங்கி வந்தது.

இந்த மாதிரியான சில பண்பாடுகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அசோகரின் அறநெறி ஆட்சி நிலைத்திருக்க முடியுமா என்ன?

அசோகர் கட்டிய அந்தச் சத்திரம் அப்படி ஒன்றும் பெரியதல்ல. ஆனால் அவர் மற்ற நகரங்களில் கட்டிய பெரிய பெரிய சத்திரங்களில் உள்ள எல்லா வசதிகளும் இந்தச் சத்திரத்திலும் இருந்தன.

குதிரைகள், ஒட்டகங்கள் கட்டுவதற்கான தனித்தனித் தொழுவங்கள், பசுமாடுகள் கட்டுவதற்கான கட்டுத் துறைகள் எல்லாம் பின் பக்கத்தில் இருந்தன. சத்திரத்தையடுத்த நந்தவனத்தில் குளிப்பதற்கான ஒரு கிணறும், மற்ருெரு மூலையில் குடி தண்ணிர்க் கிணறும் இருந்தன.

சத்திரத்தின் உள்ளே வழிப்போக்கர்கள் தங்கள் உடைமைகளை வைத்துக் கொள்வதற்கான அறைகளும் படுத்துறங்குவதற்கான கூடங்களும், சமைத்து உண்பதற்தான கட்டுக்களும் வசதியாக அமைந்திருந்தன.