பக்கம்:அசோகர் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை இரண்டு

25

வந்த போது உள்ளே உத்திரங்களில் இருந்த எழுத்துக்களும் தென்பட்டன. உள்ளே நுழைந்து வரிசையாகப் படித்துக்கொண்டு வந்தான். வேக வேகமாகப் படித்து அவற்றை அவன் உடனே மறந்துவிடவில்லை.

ஒவ்வொரு வாசகத்தையும் ஒருமுறைக் கிருமுறை படித்து, அவற்றின் பொருளே மனத்தில் வரச்செய்து, அவற்றைப் பற்றிச் சிந்தித்து, உள்ளம் ஒவ்வொரு கருத்தையும் ஒப்புக்கொண்ட பிறகுதான் அவன் அடுத்த வாசகத்தைப் படிக்கச் சென்றான்.

உண்மையே பேசு. நல்லெண்ணம் கொள். நற்சொல் பேசு. நற்செயல் புரி. உயிர்களுக் கன்பு செய். ஆசை யகற்று. மக்கள் யாவரும் நிகரே. குல வேறுபாடு கொள்ளாதே.

இப்படிப்பட்ட பல அறங் கூறு மொழிகளை அவன் படித்தான். காசியிலே பண்டிதர்களிடம் தான் கற்ற நூல்களிலே உள்ள நீதிமொழிகளோடு இவற்றை ஒப்பு நோக்கிப் பார்த்தான். அம்மொழிகளுக்கும் இவ்வாசகங்களுக்கும் உள்ள வேறுபாட்டை ஆராய்ந்தான். எவை ஏற்கத்தக்கன என்று மனத்திற்குள்ளே விவாதித்துக் கொண்டான். இதுதான் சரி. இதுதான் ஒப்பத்தக்கது என்ற முடிவுக்கும் வந்தான். அப்படி ஒவ்வொரு வாசகத்தையும் துருவி ஆராய்ந்து, இது உண்மைதான் என்ற முடிவுக்கு வந்தபிறகே அவன் கால்கள் இடம் பெயர்ந்தன.