உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகர் கதைகள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

41

யென்றால், இளவரசர்களும், வேட்டை வீரர்களும் போரில்லாத நாட்களிலே தங்கள் வீர விளையாட்டுக்களை நடத்திப் பார்க்க அங்கேதான் போவார்கள்.

சீறிப் பாயும் சிங்கத்தின் வாயைப் பிளக்க வீரவாளை எப்படி வீச வேண்டும்? பதுங்கியிருந்து பாயும் புலியை ஒதுங்கியிருந்து அம்பெய்து உயிரைப் போக்குவது எப்படி? காட்டெருதுக்குச் சினத்தை மூட்டி, அதன் ஓட்டத்தில் வேகத்தைக் கூட்டி, வேலெய்து, விலாப்புறத்தைப் புண்ணாக்குவதெப்படி? கோட்டை வாயிலிலே கட்டிவைக்க, தனித்து வரும் யானையைப் பிடித்துவருவது எப்படி ? அரண்டு மிரண்டு, இருண்டு கிடக்கும் புதர்களின் பின்னே பதுங்கியிருக்கும் மானினங்களைக் கலைத்துவிட்டு அவை பயந்து பாய்ந்தோடும் வேகத்தோடு போட்டி போட்டுச் செல்லும்படி காணிமுத்து அம்பெய்து அவற்றை வீழ்த்துவது எப்படி? இப்படிப்பட்ட விளையாட்டுக்களுக்காக அங்கே வீரர்கள் வருவார்கள்.

அப்படிப்பட்ட வீரர்களிலே ஒருவன்தான் காசி இளவரசன் ஈசுவர நாதன். இளவரசன் ஈசுவர நாதன் கம்பீரமான தோற்றமுடையவன். வீரமும் ஆண்மையும் மிக்குடையவன்.

காசி அப்போது மாமன்னர் அசோகரின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. காசி மன்னனை அசோகர் தம் அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தார். அசோகர் தம் கீழ் உள்ள அரசர்களை, என்றும் தாழ்வாக மதித்ததில்லை. அவருடைய வாழ்விலே புனிதமான மாற்றம் ஏற்படுவதற்கு முன்புகூட, தம்மிடம் கப்பம் கட்டிவரும் சிற்றரசர்களை அவர் கொடுமைப் படுத்தியதோ, இழிவாக நடத்தியதோ கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/43&oldid=734166" இலிருந்து மீள்விக்கப்பட்டது