உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அசோகர் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

அசோகர் கதைகள்

அவனுடன் ஏற்படக் கூடிய போரை எப்படித் தவிர்ப்பது? அவனுடைய முயற்சிகளைப் பின்னடையச் செய்வது எப்படி? இதற்கு எப்படிப்பட்ட இராஜ தந்திரத்தைக் கையாளுவது?

சிந்தித்துச் சிந்தித்துப் பார்த்தான். அவனுக்கு ஒரு வழியும் புலப்படவில்லை. இந்தச் செயல் தன் அனுபவத்திற்கும் அறிவுக்கும் அப்பாற்பட்டதாகப் புலப்பட்டது.

எப்படிச் செயலாற்ற வேண்டும் என்று அசோகரிடமே கேட்டு விடுவதென்று புறப்பட்டான்.

அசோகர் அங்கே இல்லை. தோட்டத்தில் இருப்பதாகக் கூறினார்கள். தோட்டத்திற்குச் சென்றான்.

அங்கே அவன் கண்ட காட்சி அவனை மெய்மறந்து நிற்கச் செய்தது. மாமன்னர் அசோகர் தோட்டத்தின் நடுவே பசும்புல் தரையில் சாதாரணமாக உட்கார்ந்திருந்தார். அவருடைய மடியிலே ஒரு மான் கன்று படுத்து அசை போட்டுக் கொண்டிருந்தது. அவரைச் சுற்றிலும் மான் கன்றுகள் அச்சமற்றுப் புல் மேய்ந்து கொண்டு நின்றன. புறாக் கூட்டம் ஒன்று அவரைச் சுற்றி இரைந்து கிடந்த தானிய மணிகளைப் பொறுக்கித் தின்று கொண்டிருந்தது. அவர் தோளிலும் மடியில் கிடந்த மான் கன்றின் முதுகிலும் இரண்டொரு புறாக்கள் குந்துவதும் பறப்பதுமாக இருந்தன. தாங்கள் அந்த மனிதருக்குச் சற்றேனும் அஞ்ச வேண்டுவதில்லை என்ற எண்ணத்துடன் அவை அவரை நெருங்கிப் பழகுவதாகத் தோன்றியது. மனிதரைக் கண்டால் அஞ்சி அரண்டோடுகின்ற மிருகங்களையும் பாய்ந்து கொல்ல முனையும் கொடு விலங்குகளையுமே கண்டிருந்த ஈசுவர நாதனுக்கு இங்கே சற்றும் அச்சமின்றி அன்பு கொண்டு பழகுகின்ற உயிரினங்களைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/60&oldid=734184" இலிருந்து மீள்விக்கப்பட்டது