பக்கம்:அசோகர் கதைகள்.pdf/65

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

63

முன்னோர்கள் போரிட்டுச் சேர்த்த பேரரசைக் கட்டிக் காத்துவருவதைத் தவிர அசோகர் எந்த அரசரையும இழிவாக நடத்தியதில்லை. எல்லோரையும் சிறப்பாகவே நடத்தி வந்தார். குடிமக்கள் எவ்வாறு அசோகரைப் போற்றி மதித்து வந்தார்களோ அவ்வாறே சிற்றரசர் அனைவரும் அவரைப் போற்றி மதித்து வந்தார்கள். அவர்கள் அசோகரின் பேரரசுக்கு ஆட்பட்டிருந்தார்கள் என்பதைத் தவிர வேறு எவ்விதமான குறைபாடுகளும் அடையவில்லை.

அசோகருடைய பேச்சு அந்தச் சிற்றரசனுடைய மனத்தைத் தொட்டது. தான் சுதந்திர அரசு நிறுவிய பின் தன் சிற்றரசுக்கு நேரிடக்கூடிய கதியைத் தன்னைக் காட்டிலும் அசோகர் தெளிவாக அறிந்திருக்கிறார் என்பதை அவன் உணர்ந்தான்.

அன்பு வழியில் ஒரு பேரரசை நிலை நாட்ட அசோகர் கொண்டிருக்கும் உண்மையான வேட்கையை அவன் மனம் ஆதரித்தது.

போர் வெறிக்கும் கொலை வெறிக்கும் ஊடே தத்தித் தடுமாறிக் கொண்டு நின்று தத்தளிக்கும் சுதந்திரத்தைக் காட்டிலும், போரரற்ற அமைதி விரும்பிய ஒரு பேரரசை, போட்டி, பொறாமையற்ற ஓர் அன்பு வழிப் பேரரசை, ஆதிக்க வெறியற்ற ஒரு நல்லரசை நிலை நிறுத்தத் தானும் உதவியாக இருப்பது பெருமைக் குரியதே என்பதை அவன் ஏற்றுக் கொண்டாள். தன் போர் ஆயத்தங்களை உடனடியாகக் கைவிடுவதாக அசோகருக்கு உறுதியளித்தான்.