பக்கம்:அஞ்சலி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90 லா ச. ராமாமிருதம்

“நாம் இருவரும் ஒரு பெரிய கூட்டத்தில் உட்கார்ந்திருக்கிறோம். வரிசை வரிசையாக முன்னாலும் பின்னாலும் வாத்தியார்களும் மாணவர்களும். எல்லோரும் மேடைமீது ஒருமுகமான கண்ணாயிருக்கிறோம். ஒரு வாலிபன், தூய வெள்ளையுடுத்து; அம்புபோல், நிமிர்ந்த உருவில் மேடையில் ஏறுகிறான். பலத்த கரகோஷம். தலைவர் எழுந்து நின்று அவன் தோளில் ஒரு கைவைத்து, அவனைக் கைகுலுக்குகிறார். தங்கப்பதக்கத்தை அவன் மார்பில் சொருகுகிறார். எல்லோரும் எழுந்து நின்று மேஜையை ஓங்கித் தட்டி குதுகலத்துடன் ஒரே ஆரவாரம். தலைவர் ஏதோ பேசப் பார்க்கிறார். வாய் அசைவது தெரிகிறதே தவிர, பேச்சு இம்பெருங் கோஷத்தில் மூழ்கிவிடுகிறது. அவர் பேச்சைத் தொடரமுடியாது சிரித்துக்கொண்டு பின்னால் கையைக் கட்டிக்கொண்டு நின்றுவிடுகிறார். அவர் நிலை கண்டதும் கூட்டத்தின் ஆர்ப்பாட்டம் இரட்டிப்பாய்ப் பெருகிவிட்டது. உன்னைப் பார்க்கிறேன். உன் கன்னத்தில் தாரைகள் ஓடுவது தெரியாமல் நீ விக்கி விக்கி சிரிக்கிறாய், அழுகிறாய், சிரிக்கிறாய்.”

“நீங்கள் மாத்திரம் என்னவாம்? உங்கள் முகத்தில் குழம்பியிருந்த குங்குமத்தை வழித்தெடுத்தால், ஆறு மாதம் இட்டுக்கொள்ளலாம்.”

அவன் பார்வை விளக்கின் சுடரில் ஊன்றியது.

“நம் மகன். என் மகன்” என்றான்.

“ஆமாம் அவன் காலேஜ் முடிந்து வந்ததும் அவசரமாய் மூட்டை கட்டி வெளியூருக்கு அனுப்பிவிட்டேளே! அதுவும் கொஞ்ச நஞ்ச தூரமா? இன்னிக்கு ராத்ரி வண்டியேறினால், முழுசா நாலு ராத்ரி, மூணு பகல் பிரயாணம், அதில் வண்டி ரெண்டு மாற்றல்...”

“என் மகன் உருப்பட வேண்டாமா, உருவாக வேண்டாமா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/100&oldid=1033437" இலிருந்து மீள்விக்கப்பட்டது