பக்கம்:அஞ்சலி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 93

அதற்கப்புறம்தான் வாசந்கதவை அவசரமாய்த் தட்டும் சப்தமே கேட்டது. விளக்கைப் போட்டுக்கொண்டு ஜமதக்னி வாசலுக்கு ஓடினான். ஆனால் அதற்குள் மாஞ்சி ஸ்மரணை யிழந்துவிட்டாள்.

***

மாஞ்சி வரண்ட கண்களுடன் மேற்கூரையைப் பார்த்தவண்ணம் கூடத்தில் கட்டிலில் படுத்திருந்தாள். அவள் பார்வை நிலைகுத்தி வெளிச்சமற்று இருந்தது. இரண்டு வாரங்களாக அப்படித்தானிருந்தாள். ஆகாரத்தை வாயில் ஊட்டினால்தான் செல்லும். மூச்சு உண்டு, மற்றபடி பேச்சில்லை; உணர்வில்லை.

ஜமதக்னி கையில் ஒரு கடிதத்தைப் பிரித்தபடி வந்து பக்கத்தில் உட்கார்ந்தான்: “மாஞ்சி பார் என்னைப் பார்—”

அவள் முகத்தை மெதுவாய்த் தன் பக்கம் திருப்பினான். அவன் கை அசைத்தபடி முகம் அசைந்தது, அவ்வளவுதான்,

“மாஞ்சி, பார்— என்னையே பார்! என்னையே பார்த்துக்கொண்டிரு, ஆ! அப்படித்தான்—” தொண்டையில் எழுந்த தழு தழுப்பை அடக்க முயன்றான்.

“உனக்கு இந்தக் கடிதத்தைப் படிக்கப் போகிறேன். இது வந்து மூன்று நாட்களாகின்றன. இதை அவசியமாய் நீ கேட்க வேண்டும். இது நம் பானுவைப் பற்றியது.”

அவள் விழிகள் தம்முள் அர்த்தத்தையும் அடையாளங்களையும் கூட்டத் தவித்தன. அதைக் கவனித்தபடி அவன் மேலும் சொல்லிக்கொண்டே போனான்.

“இது நம் பானுவின் பள்ளிக்கூடத்திலிருந்து வந்தது. பிரின்ஸிபால் எழுதுகிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/103&oldid=1033439" இலிருந்து மீள்விக்கப்பட்டது