பக்கம்:அஞ்சலி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஜமதக்னி 95

குறுக்கும் நெடுக்குமாய் விழுந்து நெருப்பு பற்றிக் கொண்டு, உள்ளே மாட்டிக்கொண்டவர்களுக்கு முத்திரை வைத்துவிட்டன.

ஒருவருமே ஒன்றும் செய்வதற்கில்லை. நெருப்பணைக்கும் வண்டி வந்த வேளைக்கு வீடு சாம்பல். வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பெரும் வைக்கோற் போர் வேறே.

உங்கள் கஷ்டத்தில் எங்கள் எல்லோருடைய பணிவான அனுதாபத்தைத் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களிருவருக்கும் தேறுதல் சொல்லும் துயரமில்லை இது.

ஆனால் உங்கள் மகன் எங்கோ தெரியாத இடத்தில் அனாதையாய் மரணம் அடைந்தான் என்று நீங்கள் எண்ணலாகாது. பானு என்றுமே ஒரு தேஜஸ்வி; தன் மறைவின் ஜோதியில் எங்கள் எல்லோர் மனதிலும் மறவாத இடம் பெற்றுவிட்டார்.

நாங்கள் அனைவரும் இரவு முழுதும் எரிந்த இடத்திலேயே காத்துக் கிடந்தோம். அங்கு நனையாத கண்களில்லை. மறுநாள் உங்கள் மகன் நினைவில் காலேஜ் மூடியது. இவ்விவரங்கள் உங்களுக்கு ஆறுதல் அளிக்க முடியாது. ஆனால் உங்கள் மகன்மேல் எங்கள் மதிப்பு உங்களுக்குத் தெரிந்தால் அதில் எங்களுக்கு ஒரு ஆறுதல்.

ஸ்ரீ பானுமூர்த்தியின் அறையைப் பூட்டி இத்துடன் சாவியை அனுப்பியிருக்கிறேன். அவருடைய உடைமைகள் அவர் கடைசியாக விட்ட நிலை கலையாமல் அங்கு இருக்கின்றன. அவைகளை எடுத்துச்செல்ல, என்று உங்களுக்கு மனம் வரமுடிகின்றதோ அன்று உங்களைச் சந்திக்க ஆவலாயிருக்கிறோம். பானுவின் தந்தையைத் தெரிந்த பெருமையை அடைந்தவர்களாவோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/105&oldid=1033440" இலிருந்து மீள்விக்கப்பட்டது