பக்கம்:அஞ்சலி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 லா. ச. ராமாமிருதம்

“ஏன் சவுக்கத்தை அக்குள் ளே இடிக்கிடிருக்கே—”

“ஊத்துக்காட்டுக்குப் போறேன்.”

“ஏன்?”

“ஏம்மா மறந்துட்டியா? நேத்திக்கு அங்கே அறுப்பு இல்லே? அறுத்ததை இன்னிக்கி அடிச்சுக் கட்ட வேணாம்? இப்பவே நேரம் போச்சு.”

“இன்னிக்குப் போவேணாம்—” அவன் முகம் சுளித்தது.

“என்ன கிளம்பற வேளைக்குத் தடுத்தா?”

“இல்லே, இன்னிக்குப் போவாதே, உன் அண்னேன்கிட்டே சொல்லு, போட்டோக்காரனைக் கூட்டியாந்துடலாம்னு.”

“என்ன?”

அவன் கண்கள் அகல விரிந்தன. கீழே சவுக்கம் விழுந்தது.

“ஏம்மா ?”

“ஆமா, அப்படித்தான்.”

அவள் நாட்டம் தூரமாகி, தென்னையின் மட்டைகளினிடையில் பதுங்கிய இளநீர் முடிச்சைக் கவ்விக் கொண்டது.

“அய்யர் வீட்டுப் புள்ளைக்கும் கம்பிவிடச் சொல்லு, பூரணி ஆத்தா கூப்பிடுதுன்னு.”

அவள் பிள்ளை பயத்துடன் கீழேயிறங்க வாசற்பக்கம் திரும்பினான்

“துரை!”

அவசரமாய் ஓடிவந்தான்.

“நீ பாஞ்சாலியை சும்மா மொத்தாதே அது நல்ல பொண்ணு. எனக்கப்பறம் அவதான், தெரியுமல்ல?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/110&oldid=1033444" இலிருந்து மீள்விக்கப்பட்டது