பக்கம்:அஞ்சலி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 103

அஞ்சாம் வருசம் என் வவுத்துப் புள்ளை குளிக்கப் போன இடத்துல ஆத்தோடே, சோடு தெரியாமே சவத்தோடே கொண்டுபோயிட்டியே, அவன்?

“ஓ, அவனா? ஆத்தா, கவலைப்படாதே. சவிக்கமாயிருக்கான். நல்ல இடத்துலேதான் தூங்கிட்டே வளர்றான். எல்லாம் உனக்குப் புடிச்ச இடம்தான். ஆத்தா உனக்கு நான் கஷ்டம் வெக்கமாட்டேன். உனக்குப் புடிச்ச வவுத்துலே வளந்திட்டிருக்கான். இன்னும் நாலு மாசத்துலே தூக்கம் கலைஞ்சு வீல்னு கத்திட்டு வெளியே வந்துடுவான், பாரு.”

“நான் எங்கே பாக்கப்போறேன்? நான்தான் போறேனே!”

“எங்கே ஆத்தா போவப்போறே?” அந்த ஆள் பொறுமையின்றிக் கையை உதறினான். ‘வரவங்க எல்லாரும் இந்தப் போறேன் போறேன் பாட்டுத்தான் பாடறாங்க. என்னத்துக்கோ, எல்லாங் கண்டவங்க மாதிரி! எங்கே யாத்தா போவறது? இடம் சொல்லேன், நானும் வந்துடறேன். நீ தாய் வீட்டுக்குத் தலைச்சன் பெக்கப்போனியே, அப்படியே தங்கிட்டியா? புருசன் நினைப்பெடுத்ததும் கந்தையிலே பையனைச் சுருட்டிக் கிட்டு ஒடியாந்துடல்லே?”

“அப்புறம் நான் போவவே இல்லியே, சாவு வாழ்வு ரெண்டுக்கும்! இத்தனைக்கும் என் தாய் வீடு தெருக்கோடிலே எதிர்சாரிதான்.”

“அட, அதுன்னா அதுவா? வாத்தியார் அய்யர் வீட்டுப் புழக்கடையிலே உங்க வீட்டு வைக்கப்போர் போட்டிருக்கீங்க, அதுலே நீ வைக்கல் பிடுங்கப் போறேன்னு வைச்சுக்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/113&oldid=1033446" இலிருந்து மீள்விக்கப்பட்டது