பக்கம்:அஞ்சலி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 113

துருவிக்கிட்டுப் போவுதுங்க. கொடியாயிருந்தா நெடுக்கப் படருதுங்க, வரிந்து இதுங்க எல்லாம் சேர்ந்து உயர, தாழ, நெடுக்க, குறுக்க இந்தப் பூமியை அளவெடுக்குதுங்களா தையல்காரன் மாதிரி? முடியுமா? முடியுதோ இல்லியோ, சும்மாமாத்திரம் இருக்கிறதில்லே பூமிலே விதையா தெளிச்ச எதுவும்...

“ஆனா கப்புவை தாயும் கன்னுமா, தானே, தான் உதை குடுத்த இடையன் கிட்டவே ஒட்டிக் கொடுக்கிற நாள் வந்துட்டுது. எல்லாருக்கும் ஒரே நாளாயிருக்குதா இந்த உலகத்துலே? எத்தனையோ மனக்கஷ்டம், பணக் கஷ்டம் எல்லாம் திடீர்னு வீட்டுலே வந்துட்டுது. அப்போ எனக்கென்ன விவரம் தெரியற வயசா? ஆத்தா, கட்டபறையாட்டம் போட்டிருந்த காசுமாலை, கச்சட்டிகை, கண்டசரம், கல்லைக்கட்டி விட்டாப்போலெ காதுமடலை இளுக்கும் சிவப்புக்கல்லுத் தோடு எல்லாம் எங்கேயோ ஒண்ணொண்ணா அண்ணன் கழட்டிக்கிட்டுப் போயிட்டுது. போனது திரும்பியே வல்லே. ஒரொரு நாளும் வீட்டுலே பழிசண்டை— ஆத்தா பூனையாட்டம் இருக்கும். இதுக்கு எங்கே வந்தது இத்தினி வாய்? எங்களுக்கே ஆச்சரியமாயிருக்கும். தொட்டத்துக்கெல்லாம் கொட்டிக்கிட்டேயிருக்கும் அண்ணனுக்குக் கொடுக்கு எங்கே போச்சு?

“அப்புறம் ஒரு நாள் சாயந்திரம் இடையன் படியேறி வந்தான். அண்ணன் கைக்கு நோட்டு ஒண்ணு ரெண்டு மாறிச்சு. மாட்டையும் கன்னையும் ஒட்டிக்கிட்டுப் பூட்டான். கப்பு தும்பைத் திமிறித் திமிறி, திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டே, கத்திக்கிட்டே போவுது. அண்ணன் வாசல்லே, கண்மேலே சவுக்கத்தைப் போட்டு நிக்குது. கப்புவையும் கன்னையும் ஊர் தாண்டின பேரத்துக்கு ஒட்டிக்கிட்டே போயிட்டான். அந்த நாள் மறக்க முடியாது.

அ.—8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/123&oldid=1033450" இலிருந்து மீள்விக்கப்பட்டது