பக்கம்:அஞ்சலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 3

இன்னும் தெரியவில்லை, திடீர் திடீர்னு அவர் போயிடுவார். ஏதாவது நினைப்பு எடுத்துண்டுட்டா, அதே பித்தாய் ஊர் ஊராய் அலைஞ்சுண்டு இருப்பார். ஆனால் எதிலும் நிலையா நிற்கமாட்டார். நடுவழியிலேயே, ஆரம்பிச்ச காரியத்தை மறந்துட்டு, இன்னொரு மோகத்தைப் பிடிச்சுண்டு திரும்புவார். சங்கீதம்னா ஒரே பித்து! யாராவது நன்னா பாடறான்னு அவர் மனசுலே பட்டுட்டா, அவன் போற இடமெல்லாம் ஊர் ஊராய்ப் பின்னாலேயே துரத்திண்டு போவார். அவருடைய அப்போதைய லட்சிய புருஷனை ஒத்தரும் குத்தம் சொல்லி மீள முடியாது. அடிக்கப் போயிடுவார். ஆனால், அந்த ஜூரம் அவரை விட்டவுடனே, அவ்வளவுதான்—அவரே அவருடைய மஹானை சாக்கடையிலே போட்டுப் புரட்டிடுவார். எதிலுமே அப்படித்தான். அவரை நம்பி பெண்ணைக் கொடுத்தப்புறம்தான், கொடுத்தவாளுக்கு அவரை எதுக்குமே நம்பறத்துக்கில்லையென்று தெரிஞ்சுது. உருப்படியா எதுக்குமே உதவாமே போயிட்டார். இதெல்லாம் உங்ககிட்ட சொல்றேனே, உங்களுக்கு என்னைப் பத்தி எனப்பமாயிருக்கோன்னோ? இதுவரைக்கும் ஏன் சொல்லல்லேன்னு கோவமாயிருக்கோன்னோ?”

“ஆமாம்.”

அவளுக்குத் திக்கென்றது. அவன் கையைத் தேடினாள்.

“நிஜமாவா?”

“ஆமாம்; உன்னைத் தள்ளி வெச்சுட்டு, மறு கல்யாணமும் பண்ணிண்டுட்டு, அப்புறம்தான் நாளைக்குப் பல் தேய்க்கப் போகிறேன்!”

“அப்பா!”—தரங்கிணி பெருமூச்செறிந்தாள். “நான் நிஜமா பயந்தே போயிட்டேன்! என்ன செய்வேன்? என்னால் எதையுமே மனசுலே பூட்டி வெச்சுக்க முடியறதில்லே. அதுவும் இன்னிக்கு, இத்தனை நாளைக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/13&oldid=1020522" இலிருந்து மீள்விக்கப்பட்டது