பக்கம்:அஞ்சலி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

122 லா. ச. ராமாமிருதம்

புறம் தொப்புள் கொடியையும் துண்டு போட்டப்பறம் கூட நம்ப எண்ணத்தைப் புரிஞ்சுக்கிட்டோம், என்ன புரியல்லே?

“கொழந்தையை மாரண்டை கொண்டு போவறத்துலேயே, பால் காம்புலே முத்திட்டு நிக்குது அவன் காம்புலே வாயை வெச்சுக் கடிச்சு இழுக்கறப்போ, இந்த உடம்புலே இரத்தம்தான் ஏன் ஓடுது? எனக்கு என்னாத்துக்கு இம்மாத்தம் ரத்தம், எல்லாமே பாலா மாறி, எல்லாத்தையும் இவனுக்குக் கொடுத்தாட மாட்டேனான்னு அவா உடல்லே துளும்பித் துடிக்குது. .

“ஒரோரு கொழந்தையும் பொறக்கறப்போ எல்லாம் இதே அவஸ்திதான். சந்தோஷம் தாங்க முடியாத ஒரு கஸ்டம். அப்பறம் ரெட்டைக் கொழந்தைங்க பிறந்திருச்சே, அப்பொத்தான் இந்த வேதனை சொல்லிக்க முடியல்லே. ரெண்டு முலையிலும் பாலை உறிஞ்சிட்டு ரெண்டும் தூங்கும். அதுங்களைப் பன்னிக்குட்டியாட்டம் அப்படியே ரெண்டு கையிலும் தாங்கிட்டே நாலு கையா வேலையை செஞ்சி வளைய வரணும். அதுங்க குடிச்சமாதிரி மத்ததுங்க குடிக்கல்லே. ஆனா தக்கல்லே; தவழ்ற வயசு வந்ததும் வாசல்லே போய் மண்ணைத் துன்னுடுங்க. என்ன பண்ணாலும் தடுக்க முடியல்லே. ரெண்டுக்கும் வவுத்துலே புத்து வைச்சுட்டுது; ரெண்டும் ஒரே நாளுலே பூட்டுது. மூணு நாளைக்கு மூலையிலே சுருண்டு படுத்து முந்தானையை மூஞ்சிலே போட்டுக்கிட்டு அழுது அழுது முழி வீங்கிப் போனாலும் மாரிலே பாலு கட்டி படுத்தின பாடு தாள முடியல்லே. கல்லாட்டம் கனத்துகிட்டு மார் வீங்கியே போச்சு. நல்ல வேளையா அன்னிக்கு எதிரிலே வாத்தியார் அய்யர் வீட்டு அம்மாவை முகமாத்தியாக் காணப் போனேனோ, புளைச்சேன். இதுவரைக்கும் எதிர்வீட்டுக்கு நான் போனதில்லே. அவங்க அப்போத்தான் வேறு ஊர்லேருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/132&oldid=1025528" இலிருந்து மீள்விக்கப்பட்டது