பக்கம்:அஞ்சலி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 125

என்னவோ. யார் பெத்தா, யார் வெச்சா என்ன? இதோ எதிரே காயா காச்சுத் தொங்குதே இந்த முருங்கை மரத்தை நானா வெச்சேன்? இல்லாட்டி என்னைக் கேட்டுத்தான் மொளைச்சுதா? ஆனால் அதன் காயை அறுத்துப் பொரியலும் குளம்புமா மாத்தி மாத்தி ஆக்கித் துன்னல்ல?

கொஞ்ச நேரமானப்புறம் அந்தப் பெரியம்மா கேட்டாங்க. எப்பவுமே கொஞ்சம் அதிகாரம்தான்.

“என்னடி உன் பேரு?”

“பூரணி.”

“அன்னபூரணியா?”

“இல்லேம்மா, சம்பூரணம்.”

அன்னி ராவுலே ஒரு கனா வந்தது. எங்கே பார்த்தாலும் சோத்தை வடிச்சு மலைமலையாக் குவிச்சிருக்குது. அதன் பால் வெள்ளை கண்ணைப் பறிக்குது! இம்மாத்தம் அரிசியை அவ்வளவு சுத்தமா குத்தி நோம்ப எத்தனை பேர் வேண்டியிருக்கும்! நான் அந்தச் சோத்துமலை ஒண்ணு மேலே முளங்காலாழத்துலே நின்னுகிட்டு, யார் யாரோ வராங்க ஆண் புள்ளையும் பொம்புள்ளையுமா தெரிஞ்சவங்க தெரியாதவங்க எல்லாம். அவங்களுக்கு ரெண்டு கையாலேயும் அள்ளி அள்ளிப் போடறேன். மடியிலும் கையிலுமா ஏந்திட்டுப் போறாங்க. ஆனால் நான் மூணு நாள் பட்டினியிலே இருக்கேன் என் வவுத்திலே ஒரு பருக்கையில்லே, எனக்குத் தெரியுது. ஆனா எனக்குப் பசியேயில்லை. இவங்க வவுறு நிறையுது என்கிற எண்ணத்துலேயே என் பசியாறிப் போயிட்டுது.

சாரி சாரியா வாங்கிட்டுப் போறாங்க. அப்படியும் ஒண்ணும் ஏழை பாழையில்லே. ஆனா என்கிட்டே வாங்கிட்டுப் போவணுன்ற எண்ணத்துலேயே வாங்கிட்டுப் போறாங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/135&oldid=1033455" இலிருந்து மீள்விக்கப்பட்டது