பக்கம்:அஞ்சலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4 லா. சி. ராமாமிருதம்

அப்புறம், இந்த ஒடற தண்ணிக் கெதிரே உக்காந்துண்டு என்னால் எதையுமே என்னுள் நிறுத்தி வெச்சுக்க முடியாது. இன்னிக்கு என் மனசு கட்டுக் கடங்காமல் ஓடறது—என் மனசில் இருக்கும் எல்லாமே. ஆமாம். எல்லாமே!” -

“அப்புறம் சொல்லு.”

“ஆமாம்; இன்னிக்கோ நாளைக்கோன்னு அம்மா என்னை நிறை வயிறாயிருந்தாள். அப்பா மேல்துண்டோடே வெளியிலே போயிட்டு மூணு மாதமா விலாசமே தெரியாமல் இருந்தவர், ஒருநாள் சாயந்திரம், என்னவோ எதிர்த்திண்ணைக்குச் சீட்டாடப் போயிட்டு வந்தாப் போலே அவ்வளவு அனாயாசமா, நிஷ்கவலையா, சாவ காசமா, “மா-ஆ-ஆ-யே-மாம் பாஹி-ஶ்ரீ பாஹி-மாம் மாயே"ன்னு பாட்டை முனங்கிணட்டு வீட்டுள்ளே நுழையறார்! அம்மா தாழ்வாரத்துலே ஏதோ பாத்திரத்தை எடுத்துக் குனிஞ்சு நிமிர்ந்துண்டிருந்தாள். அவளை அப்படிப் பார்த்ததும் அப்பாவுக்குக் கொஞ்சம் ‘திக்’குனு ஆயிடுத்து. அவரையும் அறியாமல் என்ன தோணித்தோ தெரியல்லே, கைக்காரியத்தைப் பிடுங்கிக் கீழே வெச்சார்.

‘நெற்றியிலே வேர்வை கொப்புளிச்சு நிக்கறதே, காற்றாட ஆத்தோரமா கொஞ்சம் போயிட்டு வருவோம் வா’ன்னார்.

“பாட்டி கூடத்திலே பாயிலே படுத்திருந்தாள். அவளுக்கு வயசு தள்ளாமை.

இதுதானாடா சமயம்? எங்கே போயிருந்தே, என்ன பண்ணினே?” .

“எங்கப்பாவுக்குத் தனியா ஒரு மூர்க்கம் உண்டு. சமயம் போது எதுவுமே இல்லாத மூர்க்கத்தனம்.

“ஏன்? என் ஆம்படையாளோடு நான் கொஞ்ச நாழி பேசறது கூடச் சகிக்கல்லையா? நான் அப்படித்தான் கூட்டிண்டு போவேன்” என்று இரைந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/14&oldid=1033378" இலிருந்து மீள்விக்கப்பட்டது