பக்கம்:அஞ்சலி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130 லா. ச. ராமாமிருதம்

தொண்டையிலே துக்கம் பிரண்டுது. பூட்டான் அவன். நான் தண்ணிலேயே குந்திப்டிருந்தேன். இப்போ என்ன இப்படி எனக்கு ஏன் இருக்குது? நெனைப்பு இருப்புக் கொள்ளமாட்டேங்குதே!

வீட்டுக்கு வந்தேன். விரல் நுனியிலே குங்குமத்தை ஏந்திட்டு சமையல் வீட்டிலே செவுத்துலே பதிச்ச கண்ணாடிலே மொவத்தை நீட்டினேன். எனக்கு ஆச்சரியமா இருந்தது. என் மூஞ்சியும் அவன் மூஞ்சியும், ஒரேவெட்டா என்ன? அவன் செவப்பு. நான் கறுப்பு. அது தவிர, நெத்தி சரிவு, மூக்கெடுப்பு எல்லாம் ஒரு அச்சா, இருந்தது. இது என்ன நெசமா வெறும் நெனப்பா?

சோறு உண்டையா தொண்டையிலே சிக்குது. கலத்தோடே எடுத்துப் போய்க் கழுநீர்த் தொட்டிலே, கொட்டிட்டேன். (நெனைப்பு விண்விண்ணுன்னு புண்ணாட்டம் தெறிக்குது). ஏணையிலே தூங்கிட்டிருந்த கொழந்தையை எடுத்து மடியிலே விட்டுக்கிட்டேன். என்ன செய்யறது, செய்யுதென்னன்னு புரியதில்லே.

“ராச் சோறும் தொண்டை வரைக்கும் கசந்தது. கையிலே இலையை ஏந்திட்டு நாயைக் கூப்பிட வாசலுக்குப் போனேன். பக்கத்து சந்து இருட்டிலேருந்து அந்த ஆளு பிரிஞ்சு வந்து இரண்டு கையையும் நீட்டினான். எனக்கு உடம்பு பரபரன்னுது.

“ஐயா இது எச்சில், உள்ளே வந்து குந்து, இலை போட்டு சாப்பாடு வெக்கறேன்.”

அவன் ஒண்னும் பதில் பேசல்லே. புன்சிரிப்போடு என் கையிலேருந்து எலையை இழுத்தாப்போலே பிடுங்கிட்டு, சாமி கும்பிடறாப்போலே எனக்குத் தலை வணங்கிட்டுப் போனான். கைகூடக் கழுவாமே நான் நடைத் திண்ணைலே கொஞ்ச நேரம் குந்தியிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/140&oldid=1033459" இலிருந்து மீள்விக்கப்பட்டது