பக்கம்:அஞ்சலி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134 லா. ச. ராமாமிருதம்

பிடிக்காமலே மொவத்துலே விஜனத்தைக் காட்டியே அவன் என்னைத் தன் பக்கம் இழுக்கறப்போ எனக்குப் பயம் பொறந்து வெடவெடன்னு முட்டிக் கால் உதறிச்சு. நான் தடால்னு குப்புற விழுந்து பூமியைக் கெட்டியாப் பிடிச்சுக்கிட்டேன்.

“நீ போ... நீ போ... மரியாதையா போயிடு. இங்கே நிக்காதே... ஓடியே பூடு...”

“அவன் என்னைப் பார்த்தபடியே மெதுவாகத் திரும்பினான். மெதுவாக நடந்து அப்புறம் விர்ர்ருனு வேகமா நடந்து போயே போயிட்டான். என்னைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கிட்டு, விழுந்த இடத்துலேருந்து மெதுவா எழுந்தேன்.

அன்னி சாயந்திரம் தெருவுலே ஒரு சமாசாரம் பொறி கிளம்பி சீறிக்கிட்டு ஊரெல்லாம் பத்திக்கிச்சு.

காவா மேட்டு மரத்துலே ஒரு பிணம் தொங்குது. ஊரு பிரண்டுது; பார்த்தது தேரு திருவிழாவாட்டம். ஆனால் நான் போவல்லே.

“அந்த ஆள் எனக்காகத்தான் உயிர் விட்டான்னு நெனக்கிறப்போ என்னுள்ளே என்னவோ ஒண்ணு புண்டு விழுந்தது. நின்ன இடத்துலே நின்னுட்டு சோறு கொதி தெரியாமே மூணு நாளைக்கு யோசனை பண்ணிட்டிருந்தேன். புரியாத துக்கம் அடைச்சு அடைச்சுத் தொண்டை வெடிக்குது. அவன் யாரு, நான் யாரு? இது மாதிரிகூட உண்டா? இப்படி என்னாத்துக்கு நடக்கணும்? அவன் கனவிலே வந்தது மெய்தானா? அவன் சொன்னதெல்லாம் மெய்தானா? அதுவே கனவுதானா? இந்தக் கேள்விக்கெல்லாம் யாரைப் போய்ப் பதில் கேக்கறது? பதிலே உண்டா? இந்தக் கேள்விங்களை எனக்கு வெச்சுட்டு இவன் ஏன் பாேய்டான்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/144&oldid=1033460" இலிருந்து மீள்விக்கப்பட்டது