பக்கம்:அஞ்சலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தரங்கிணி 5

“அம்மாவுக்கும் அப்போ அப்படி வர வெக்கமா இருந்தது. மனசும் இல்லை. இடக்குப் பண்ணினாள்”.

‘நான் சொல்றேன், நீ கேட்கப் போறையா இல்லையா?” அப்பா அதிகாரம் பண்ணினார்.

“தர்க்கம் பண்ணுவதைவிடத் தணிந்துபோவதே மேல்” என்று அம்மா எதிர்பேசாமல் கிளம்பிவிட்டாள்.

“வாசல்படி தாண்டினதுதான், அப்பாவுக்குக் காரம் எல்லாம் எங்கோ சிட்டாப் பறந்தோடிப்போச்சு.

“வழியெல்லாம் விரலைச் சொடக்கிண்டு ‘மாயே’

மெட்டை முனகிண்டு நடந்தார். இதோ, இங்கேதான், மணலில் உட்கார்ந்ததும் ஏதோ ஆரம்பித்தார்.

“என்ன போ, ராஜி! நேத்து அனக்காபுத்துார் குதிரை வாகன உற்சவத்துக்குப் போயிருந்தேன். சேந்தரம்பள்ளி ஆறுமுகம் நாயனம் வாசிச்சான். இந்த ‘மாயே’ பாட்டை

ஊதியிருக்கான், பாரு! ஹாம்! நாலு வீதியையும் வளைச்சாச்சு, பாட்டு முடிஞ்ச பாடில்லை. வெளுத்துக் கட்டிட்டான், போ! இத்தனைக்கும் அடைப்பம்

தூக்கறவன்தான்! நேத்திக் காலையிலேகூட அவன்கிட்டத் தான் பண்ணிண்டேன். ‘என்னடாப் பாவி, கழுத்தை வெட்டறயே’ என்றுகூடக் கேட்டேன். வாத்தியத்திலே புத்தியை வெச்சுண்டிருந்தால் கத்தி கழுத்தை வெட்டாமல் என்ன பண்ணும்? அடே! சுவரை வெச்சுண்டுதான் சித்திரம் எழுதணும். கத்திதாண்டா உன் வயத்துப் பிழைப்பு. துருத்தி ஆத்ம திருப்தி அவ்வளவுதாண்டா’ என்று புத்தி சொன்னேன். சொன்னேனே யொழிய, பயல் வாசிப்பைக் கேட்டப்புறம் எனக்கே தாங்கல்லே. ஸ்நானம் அப்புறம் பண்ணிண்டாலும் போறதுன்னு அவனை அப்படியே கட்டிண்டுட்டேன்-”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/15&oldid=1033379" இலிருந்து மீள்விக்கப்பட்டது