144 லா. ச. ராமாமிருதம்
இஸ்டம் ரெண்டும் இல்லாமே எனக்குச் சொல்லத் தெரியல்லே. மனசுக்குத்தான் அந்த நிலவரம் தெரியுது. நேரம் ஆவ ஆவ அன்னிக் காரியம் எல்லாமே எனக்கு அப்படித்தான் இருந்திச்சு. நான் ஒண்ணுமே நடத்தல்லே தானே எல்லாம் நடந்துட்டுப் போவுது. ஒரு சாமான் வீட்டிலே குறைவில்லே. அதெப்படித்தான் அப்படியோ? அரிசி பானை நிறைய நிக்குது. கிள்ளிப்போடற கொத்தமல்லிக்குகூட கூடைக்காரியைக் கூப்பிடத் தேவையில்லே. கறிகாய்த்தட்டு பொங்கிவழியுது.
எல்லாச் சாமானும் நல்லா அமுக்கி மூடி வெச்சாச்சு. சோத்துப் பானையிலே தண்ணி ஊத்தியாச்சு. மத்தியானமே, பெட்டியிலே புடவைத் துணியெல்லாம் ஒழுங்கா அடுக்கிட்டேன். கொடியிலே ஈரத்தைச் சுருக்கம் இல்லாம தட்டி உலத்திட்டேன். நாளைக்கு என்னை ஒத்தரு ஒரு குத்தம் சொல்லக்கூடாது. கண்ட சாமானைக் கண்ட இடத்துலே போட்டுட்டு பூட்டான்னு. என் கொழந்தைங்க பாயிலே உறங்குதுங்க. அதுங்களை முத்தமிட்டு மேலே போர்த்திட்டேன். பாசம் புடிச்சு இளுக்கும் என்கறாங்களே, ஆனா துணிஞ்ச கட்டைக்குத் துக்கமேதுன்னு என் விசயத்துலே எவ்வளவு மெய்யாப் போச்சுன்னு நெனைச்சா என் தொண்டைக்குள்ளே கள்ளச்சிரிப்பு எனக்கு காது கேக்குது! எல்லாத்துக் கிட்டேயும் என் மனசிலே செலவு பெத்தாச்சு. ஆமா நீ சொல்றது வாஸ்த்தவமாத்தான் போச்சு. எல்லாத்துக்குந்தான் உசிரிருக்குது. பாலைப் பிறை குத்திப் பானையை வெச்சேனே, அந்த உறிகூட இப்போ தனி உசிரோடுதான் ஆடுது. அடுப்பு, குத்து விளக்கு, விளக்குமாறு, உரல் உலக்கை, நான் இன்னி வரைக்கும் எடுத்து ஆண்ட சட்டிப்பானை மொதக்கொண்டு எல்லாத்துக்கும் போயிட்டு வாரேன். இந்த வீட்டை இனி நீங்கதான் பாத்துக்கணும். இனிமே கொல்லைப்புறம் போய் மாட்டுக் கொட்டாயிலே மாட்டின் பின்புறத்தைத் தொட்டுக் கண்ணுலே ஒத்திக்கிட்டு அப்புறம்,