பக்கம்:அஞ்சலி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பூரணி 145

“சி வோ ஹம்!—”

வாசல்லே சத்தம், ராப்பிச்சை இல்லேன்னு சொல்லுவானே! போறது போறேன் போட்டுட்டுதான் போறேனே!

சோத்தைப் பிழிஞ்சு ரெண்டு கையிலும் ஏந்தி கிட்டு வாசலுக்கு வந்தேன். தாடியும் மீசையும் கந்தலும் அளுக்குமா ஆளு நிக்குது, வவுறு முதுவுலே குழிஞ்சு. என்னைக் கண்டதுதான், என்னாத்தையோ சொல்ல உதடு துடிக்குது. ஆனா பேச்சு பிரளல்லே. தொண்டையிலே கை போய் போய் தவிக்குது. நான் குனிஞ்சு முவத்தைக் கவனிச்சேன். கைசோறு கீழே சிதறிப்போச்சு. தோச்சு உலத்தினாப்போலே லேசாயிருந்த மனசு ஒரேயடியா ஒரே வெள்ளத்துலே அடிச்சூட்டு போயே பூட்டுது. அதுக்குள்ளேயும் அதுக்குத் தலையாடிப் போச்சு. நான் என் கொழந்தையை அப்படியே வாரியணைச்சு தூக்கினாப்போலே உள்ளே கொண்டு போயிட்டேன்.

இப்பவுந்தான் எண்ணுறேன். தாம் எந்தக் கோவிலுக்குத் தனியாப் போவனும்? எந்தக் கடவுளைத் தனியாத் தேடணும்? எந்தப் பூசையைத் தனியா செய்யணும்? ரோசனை பண்ணு. நான் இத்தனை நாளா இட்ட பொட்டெல்லாம் புஷ்பமில்லியா? திட்டின திட்டும் வேண்டி வேண்டி உருகினதெல்லாம் தோத்திரமில்லியா? தெய்வமா பெரிசு? தேடறதுதானே முக்கியம்? எனக்கு ஏன் இப்படித் தோணுதோ தெரியல்லே. இப்படி ஆனா இதை நெனைக்கற கர்வம் எனக்கு இருந்தால், இருந்துட்டுப் போவட்டும். அது இந்தப்பூமிலே பொறப்பாப் பொறந்த கர்வம்தான். மத்தபடி கெட்டது ஒண்னுமில்லே, அதுவும் தேரியுது.

இதோ பெரிய அடுப்புலே சுடுதண்ணி வெக்கறேன். வெச்சு என் புருசனுக்கு என் கையாலேயே தலைக்கு விட்டு

அ.—10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/155&oldid=1025804" இலிருந்து மீள்விக்கப்பட்டது