பக்கம்:அஞ்சலி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158 லா ச ராமாமிருதம்

“நீ உள்ளே வந்ததும் என்னவோ சொன்னயே என்னது?”

“எனக்கு நினைவில்லையே—”

“சப்தங்கள் என்னவோ மகரந்தப் பொடிகள்னு—அது நன்னாயிருந்தது, நீ சொன்ன தினுசு—”

“எனக்கு வெட்கமாய், ஆனால், பெருமையாயிருந்தது, நான் வால்மீகியோன்னோ—”

“வால்மீகி நான் ஒரு அசடு—”

முன்பின் சம்பந்தமிலாது அம்மா அப்படித் தெரிவித்ததும் எனக்குக் ‘கிளுக்’கென்று சிரிப்பு வந்துவிட்டது. ஆனால் அவள் சிரிக்கவில்லை.

“எந்த அசடு சொல்லித்து அம்மா அசடுன்னு?”

“நான்தான் சொல்றேனே. நான் அசடுன்து அவள் குரல் நடுங்கிற்று. ஆனால் அதில் ஒரு தீவிரமான தெளிவு இருந்தது. அதைக் கேட்டதும் என் சிரிப்புப் பறந்தோடிப் போயிற்று.

“இல்லை அப்படியெல்லாம் சொல்லாதே அம்மா”—

“நான் அசடு அசடு அசடு அசடு அசடு”—

வெறி பிடித்தவள்போல் கத்தினாள். அவள் குரல் ஏறிக்கொண்டே போய் உச்ச ஸ்தாயியில் ஒன்பது சுக்கல்களாய் உடைந்தது. கோரமான அழுகையுடன் தடாலென்று வீணைமேல் விழுந்தாள். தந்திகள் வீறிட்டன.

“அம்மா அம்மா அம்மா...”

அவள் நெற்றிப் பொட்டு கொதித்தது. எனக்கு அவள் பதிலளிக்கவில்லை. வாத்தியத்தின்மேல் குப்புற விழுந்த படியே விக்கி விக்கி அழுது கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/168&oldid=1033474" இலிருந்து மீள்விக்கப்பட்டது