பக்கம்:அஞ்சலி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



காயத்ரீ 159

நான் வயலில் கரும்புக் கன்றுகளுக்கிடையில் நின்று கொண்டிருந்தேன். தலைக்குமேல் கருப்பந்தழைகள் முன்னும் பின்னும் அடர்ந்து ஓங்கி மறைத்தன. அங்கு ஒளிந்து என் மனச் சஞ்சலத்தை மறக்க முயன்றேன்.

அப்பொழுது குழலின் ஓசை என்னை அழைத்தது. பட்டுப் பூச்சியின் இறக்கைகள்போல் ஒரு ஸ்வரம் அந்தரத்தில் படபடவென்று அடித்துக்கொண்டு என்னை அழைத்தது. கரும்புகளின் அடவியிலிருந்து வெளிவந்தேன்.

இன்று அவள் வானத்தின் நீலத்தையே உரித்து உடுத்தியிருந்தாள். நீல ரவிக்கை, நீலத்தாவணி, நீலப் பாவாடை. கையில் நீல வளையல்கள். நெங்றித்திலகம் கூட நீலம்.

“ஓ, வந்துவிட்டாயா? உடம்பு செளக்கியமா?” அவள் பற்கள் பளீரென்றன. நான் அவளின் நீறக் கோலத்தில் லயித்து நின்றேன். ஆனால் அவள் ஒன்றும் லஜ்ஜைப்படவில்லை. அவள் மேலாக்கு மெல்லக் காற்றில் ஆடி அலைந்தது. அவள் கையில் பிடித்திருந்த புல்லாங்குழலின் நீலப்பட்டுக் குஞ்சம் குதித்தது.

“என்ன பேந்தப்பேந்த முழிக்கிறாய்?”

“உன்குழல் என்னை அழைத்தது”.

“ஒ இதுவா, நான் இப்படி அழைத்தால் நீ இப்படி வருவாய் என எனக்குத் தெரியும்.”

எனக்கு ஆச்சரியமாயிருத்தது.

“நான் இங்குத்தான் இருக்கிறேன் என உனக்கெப்படித் தெரியும்?”

அவள் பதில் பேசவில்லை, சிரித்தாள். அவள் கேலி பண்ணுகிறாளா, மெய்யாகவே அவன் சொல்வதை அவள் நம்புகிறாளா என்று புரியவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/169&oldid=1033475" இலிருந்து மீள்விக்கப்பட்டது