பக்கம்:அஞ்சலி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

164 லா ச. ராமாமிருதம்

எட்டு மாசமாய்ப் பேசல்லே தெரியுமா? நீங்கள் ஏன் என்று கேக்கல்லே. ஆனால் எட்டு மாசமாய்ப் பேசல்லே—”

அம்மாவின் குரல் விம்மியபோது என் தொண்டையும் அடைத்தது.

—“அப்போ நானே வெக்கத்தை விட்டுட்டு, ஆனால் வாய்விட்டுப் பேச அஞ்சி, அந்தப் பத்து நாளைய பச்சைப் பிண்டத்தை அப்படியே ஏந்திண்டு வந்து உங்கள் காலடியிலே போட்டு உங்களை நமஸ்கரித்தேன். அப்பவாவது என்னை ஒருவார்த்தை நீங்கள் கேட்டிருக்கலாம்; என்னை நம்பியிருக்கலாம் குழந்தையைத் தூக்கியிருக்கலாம். நம் குழந்தைக்காகவாவது எனக்கு ஒரு மன்னிப்பு இல்லை. என்னைக் காலால் உதைச்சாவது இருக்கலாம். இல்லை. உங்களிடம் மன்னிப்பு இல்லை. மன்னிக்க இஷ்டமில்லை. நீங்கள் கேக்காத கேள்வியைப் பத்திரமாய் நீங்களே உங்களுள் பத்திரமாய்ப் பூட்டிவைச்சுண்டு அப்படியே திரும்பி வெளியிலே போயிட்—டே—ள்”—

அம்மா கதறிக் கதறி அழுதாள். காற்றில் அலையும் சருகுபோல் அவள் உடம்பு எப்படி அந்த உள் புயலில் குலுங்கியிருக்கும் எனக்குத் தெரியும். ஒரு சின்னக் கஷ்டம் கூட அம்மா காணச் சகியாள். எலி உபத்திரவம் பொறுக்காது எலிப்பொறி வைப்பாள். ஆனால் பொறியில் எலி விழுந்ததும், பொறியுள் கம்பிகளின் பின் எலியின் கண்களைக் கண்டதும் கண்ணிர் விட்டுவிடுவாள். அப்படிப்பட்டவள் எப்படி இவ்வளவு பெரிய, எத்தத் துக்கத்தைச் சகித்துக்கொண்டிருக்கிறாள்?

அப்பொழுது ஸன்னமாய்க் காற்று எழுந்து இலைகள் சலசலத்தன. அது கிளம்பும் தினுசிலேயே அது ஒரு புயலின் முன்னடியென்று தெரிந்தது. இதுவரை இலை கூட அசையாது முன் அமைதி, மேல் நோக்கினேன். கரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/174&oldid=1025919" இலிருந்து மீள்விக்கப்பட்டது