பக்கம்:அஞ்சலி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

167 காயத்ரீ

“ஆமாம்; என் பெண்மையுந்தான் மறந்தது. நான் வெளியேறத் துணிஞ்சுட்டேன். ஒத்தையடிப்பாதை ஒண்னு ரயில் ஸ்டேஷனுக்கு ஒரு மைல் தூரம் போச்சுன்னு தெரியும். எந்தப் பாதைன்னு நிச்சயமாய்த் தெரியாது. என் ஊருக்கு ஒரு வண்டிதான் ஒடித்து. அதுவும் நடுராத்ரி. நாலு நிமிஷந்தான் அந்த ஸ்டேஷனில் நிக்கறதுன்னு தெரியும்; அவ்வளவுதான்.

என் பெட்டியைத் திறந்தேன். கலியாணப் புடவை பளீரெனக் கண்ணைப் பறிச்சுண்டு மேலாகக் கிடந்தது. அதை ஒரு பையுள் அடைச்சுண்டேன். ஒரு வெள்ளி மைச் சிமிழ் இருந்தது. அதன்மேல் சபலந்தட்டித்து. அதையும் எடுத்துண்டேன். உங்கள் சட்டை ஆணியில் தொங்கித்து. அதிலிருந்து ரயில் சார்ஜ் மாத்திரம் திருடினேன். ஒரு கால் ரூபாய் உருண்டு ஒடித்து. அதைக் குனிஞ்சு தேடிப் பொறுக்கி எடுத்துண்டேன். அதுகூட எனக்கு நினைவு இன்னம் மறக்கல்லே. அந்தச் சப்தம் உங்களைக் கலைச் சுடுமோ என்கிற திகில். எனக்கு நாய்மாதிரி இறைச்சுது.

அதோ உங்கள் அறையில் ஒரு ராந்தல் வெளிச்சத்தில் மேஜைமேல் ஒரு ப்ளானை விரிச்சுப் போட்டுண்டு எதையோ குறிச்சுண்டிருக்கேள். அந்தமாதிரி நிலையில் உங்களை நான் பார்த்தபோது, உங்கள்மேல் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கைகூட நூல்மாதிரி பட்டென அறுந்துபோச்சு. நீங்கள் எப்பவும் அப்படித் தானிருப்பேள். நான் இங்கேயிருந்தாலும் உங்களுக்கு ஒண்ணு தான். அப்புறம் எனக்கு இங்கே என்ன வேலை? எனக்கு எப்படித்தான் அத்தத் தைரியம் வந்ததோ? சட்டென வாசல் கதவைச் சத்தம் போடாமல் என் பின்னால் இழுத்து மூடிண்டு நாலடி முன்னாலே எடுத்தும் வெச்சுட்டேன்.

ஒரே கும்மிருட்டு. ஒத்தையடிப்பாதை எதிரே பத்தடிக்கு நாடாமாதிரி ஒடித்து. அப்புறம் அதுவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/177&oldid=1025929" இலிருந்து மீள்விக்கப்பட்டது