பக்கம்:அஞ்சலி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 லா. ச ராமாமிருதம்

பாத்திரம் தேய்க்கற செங்கமலமோ சின்னம்மாளோ, ஆளுக்குக் கொஞ்சம் என்னை எடுத்து விட்டுட்டுப் போவாளாம். இதெல்லாம் பாட்டி எனக்கு அப்புறம் பேச்சு வாக்கிலே சொன்னதுதான். என்னை அப்படி எடுத்துவிட்டவள் ஆளுக்கு ஒரு பிடியாய் உயிரை வளர்த்து விட்டவர் எலும்பையெல்லாம், நாளடைவிலே இந்த ஆற்றிலேயே கரைச்சாச்சு.

“அப்பாதான் எனக்குத் ‘தரங்கிணி’ன்னு பேர் வெச்சா. அந்த ‘மாயே’ பாட்டினுடைய ராகமாமே அது.”

“ஆமாம். உங்கப்பா உங்கள் வீட்டுக்கு நல்லவரில்லையோ என்னவோ, அவர் விஷயங்களை அனுபவிக்கத் தெரிந்தவர் என்று தெரிகிறது.”

“நீங்கள்தான் மெச்சிக்கனும், என்ன வேண்டியிருக்கு!” இருளில் தரங்கிணி அலுப்புடன் கையை உதறினாள். “பேர் வெச்சதோடு சரி; அவர் மாறல்லே. ஒருநாள் தெருக் குப்பையிலே அக்கும் அலக்குமா ஒரு வைத்தியப் புத்தகம் கிடந்ததாம்; அதையெடுத்து வெச்சுண்டு வீட்டிலே ரெண்டு நாள் சேர்ந்தாப்போலே சோத்தைக்கூட மறந்துட்டுப் புரட்டிண்டிருந்தாராம். அப்புறம் அதிலே பேர் கண்ட மூலிகை ஒண்ணைத் தேடப்போறேண்டா ராஜான்னு போனவர்தான்; இன்னும் வரப்போறார்! பாட்டிக்குக் கொள்ளி போடக்கூட வரல்லே. கிழவி அடுத்த தெருவுலே என் மாமா தலையிலே என்னைக் கட்டிட்டுப் பிராணனை விட்டாள். நான் அங்கேதான் வளர்ந்தேன். என் வளர்ப்பே இப்படித்தான். இங்கே உறவாத்துலே கொஞ்ச நாள், அங்கே தெரிஞ்சவா வீட்டிலே கொஞ்ச நாள், தெரியாதவா ஆத்திலே கொஞ்ச நாள்...என் அம்மா என்னை எப்போ காவேரிக்குப் பெண்ணா ஆசீர்வாதம் பண்ணிவிட்டாளோ, அப்படியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/18&oldid=1020527" இலிருந்து மீள்விக்கப்பட்டது