பக்கம்:அஞ்சலி.pdf/180

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

170 லா. ச. ராமாமிருதம்

புறப்பட்டுடுத்து. அது அம்பு இல்லை. என்னிடமிருந்து கிரஹிச்சுண்ட என் மூச்சேதான் கூர்மையாகி, அம்பு போல ஒரு உருவமாகி அந்த முழியிலிருந்து கிளம்பி ஒரே சீறலாய் வந்து—ஐயோ!”

அம்பு அப்போத்தான் தைத்தாற்போல் அம்மா வாய்விட்டு ‘க்றீச்’ சென்று கத்தினாள். அலறிக்கொண்டு நான் உள்ளே ஒடினேன். உள்ளே இருட்டு, தடுக்கி விழுந்தேன்.

அறையில் சட்டென வெளிச்சம் உதயமாயிற்று. அப்பா உயரமாய் நின்றார். அவர் காலடியில் அடி வயிற்றை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டு அம்மா துடித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் முழுதும் வேர்வை ஸ்னானமாய்க் கொட்டியிருந்தது. மூச்சும் பேச்சும் திணறின. ஆனால் அவள் பேசிக்கொண்டேயிருந்தாள். அவளால் பேச்சை நிறுத்த முடியவில்லை.

“நான் கத்தினதுதான் எனக்குத் தெரியும். எனக்கு நினைப்பு வந்தபோது நான் கட்டிலில் படுத்துண்டிருந்தேன். நீங்கள் பின்னாலே கையைக் கட்டிண்டு நின்னுண்டு என்னையும் என் தலைமாட்டில் உக்காத்தி வெச்சிருந்த மூட்டையையும் மாத்திமாத்தி பாத்திண்டிருந்ததுதான் நினைவு இருக்கு. உங்களுக்குப் புரியல்லே. வாஸ்தவந்தான்; நீங்கள் என்னைக் கேக்கல்லே. ஏன் என்று என்னை இன்னமும் நீங்கள் கேக்கல்லே; ஏன்? என் கத்தல் கேட்டு ஓடி வந்தேளா? என்னைக் காணாேமேன்னு தேடிண்டு வந்தேளா? அல்லது வெளியிலே காற்று வாங்க வந்த இடத்தில் காலடியில் கையில் பைமூட்டையுடன் நான் விழுந்து கிடந்ததைக் கண்டேளா? கண்டதும் உங்கள் நெஞ்சில் என்னென்ன எண்ணம் ஒடித்தோ? சொல்லாமல் என்ன தவிப்பு தவிச்சேளோ? ஆனால் நீங்கள் வெளிக் காண்பிச்சுக்கல்லே. நீங்கள் வெளிக் காண்பிச்சுக்கமாட்டேள். நானும் என்னென்னவோ சொல்ல வந்தேன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/180&oldid=1026004" இருந்து மீள்விக்கப்பட்டது