பக்கம்:அஞ்சலி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174 லா. ச. ராமாமிருதம்

என்னத்தைப் பேசறதுன்னுகூட எனக்குத் தெரியல்லே. ஆனால், நீ இப்போ சாம்பலைக் கையிலெடுத்துப் பார்த்தப்போ எனக்குப் புரியாமல் ஏதோ திகிலாயிடுத்து—”

அவள் என்னைக் குழந்தைபோல் சட்டெனக் கட்டிக் கொண்டாள். என் கைகளின் அணைப்புள் அவள் உடல் வெட வெடவென்று உதறிற்று.

“உன் பேர் என்ன?” என்றேன்.

“காயத்ரீ”

ஆழ்ந்த துயரத்தின் எல்லைக் கரைகளின் தொலைவிலிருந்து இன்ப அசதி மூச்சுகாற்றில் மிதந்து வந்தது. மாலையில் மலர்ந்த புஷ்பத்தின் மணம் எங்களைச் சுற்றிக் கமழ்ந்தது.

“ஏ—ஹோய்—ய்—”!

யாரோ பண்ணையாள் இன்னொரு ஆளுக்கு ஏதோ சமிக்கையாய் கூவுகிறான். அந்தக் குரலின் வெண்கல நாதம் வீங்கி ஆகாய வெளியில் விறுவிறுத்துக்கொண்டே போய்ப் படிப்படியாய் ஒய்ந்தது.

மரங்களிலிருந்து இலைகளின் ஒசைகள் ஆசி அட்சதையைத் தூவினாற்போல் உதிர்ந்தன. தூரத்தில் வில்லிக் குடிசைகளிலிருந்து அவர்களின் கேளிக்கைக் கூத்தின் டமார ஒலி மிடுக்குடன் எழுந்தது. என் இதயத்துள் தந்திகள் மீட்டி முனகின.

என் கண்னெதிரில் சூரியனின் ஏழு வர்ணங்களும் ஒன்றிலிருந்து ஒன்று நுரை கக்கிக்கொண்டு புறப்பட்டு ஒரே வர்ண வெள்ளத்தின் பல சாயங்கள் பல சாயல்களில் குழம்பின. ஈரத்தை உறிஞ்சும் துணிபோல், என் உடல், அதன் சல்லடைக் கண்கள் அத்தனைமூலம், இத்தனைக் காட்சிதியை அதன் அத்தனை பேதங்களுடன் உறிஞ்சி, விசுவ தரிசனத்தில் இழைவதுபோல் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/184&oldid=1033482" இலிருந்து மீள்விக்கப்பட்டது