பக்கம்:அஞ்சலி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178 லா. ச. ராமாமிருதம்

நோக்கியபடி அவர் வார்த்தைகள் புலப்படும். பிறன், தன் பார்வையின் தீட்சண்யத்தைத் தாங்க முடியாது எனும் எண்ணத்தினால்தான் அவர் அப்படி முகங் கொடுக்காமல் இருக்கிறாரோ என்னவோ? மொத்தத்தில் அப்பா பீதியைக் கொடுப்பவர்.

கால புருஷன்.

“வால்மீகி!”—

“அப்பா நான் மனதைப் பறிகொடுத்துவிட்டேன். விடுபட முடியாது போலிருக்கிறதே!”

“இப்பொழுது விடுபடாவிட்டால் அப்புறம் விடுபடவே முடியாது. அதனால்தான் இப்பவே சொல்கிறேன்—”

என் கன்னத்தை பீங்கான் போன்று வழுவழுத்த இன்னொரு கன்னம் அழுத்திற்று. பாம்புபோலும் இரு கைகள் என் கழுத்தைச் சுற்றிப் பின்னி, பஞ்சினும் மிருதுவான மார்மேல் அழுத்திக்கொண்டன. மல்லிகையின் மணத்தில் என் மூளை கிறுகிறுத்தது.

“அப்பா நான் என் மனதைப் பறிகொடுத்து விட்டேன். அப்பா எனக்கு வரங் கொடுங்கள்.”

“வால்மீகி! அவள் நல்லவள் அல்ல.”

“அப்பா-”

“வால்மீகி! நான் உன் அப்பா—”

திடீரென என்னை மீறிய கோபாவேசம் அடிவயிற்றிலிருந்து எழுந்தது.

“அப்பா உங்களுக்குத் .தெரியாததே ஒன்று மில்லையோ!—”

“வால்மீகி—”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/188&oldid=1033484" இலிருந்து மீள்விக்கப்பட்டது