பக்கம்:அஞ்சலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10 லா.ச.ராமாமிருதம்

“இந்த ஜலத்தை அடிக்கடி உள்ளங்கையில் எடுத்து விரலிடுக்குகளின் வழியா என்மேலேயே விட்டுப்பேன். அதில் எனக்கு ஏதோ அலாதி அர்த்தம் மனசுக்குத் தெரியும்; ஆனால் வார்த்தைக்குப் புரியாது.

“எனக்கு அடிக்கடி ஜலதோஷம் வந்துவிடும். என்னை ஜலத்தில் துளையக் கூடாதுன்னு தடுப்பா. தப்பளைன்னு திட்டுவா. ஆனால் திருட்டுத்தனமா நான் இங்கே வந்து போயிண்டுதான் இருப்பேன்.

“அந்த ஊரிலே வெள்ளம் வந்தது; இந்த ஊரிலே ஜலம் பெருகித்து; வீடு, வாசல், மண்ணு, ஆடு மாடு, மனுஷாளையெல்லாம் அடிச்சுண்டு போச்சுன்னு எங்கேயாவது யாராவது பேசிண்டிருந்தால், உடனே அதுமாதிரி ஏன் நம்ம ஊர் ஜலம் பெருக மாட்டேன்கறதுன்னு எனக்கு ஏதோ ஏமாத்தமா, நமுநமுன்னு வருத்தமாக்கூட இருக்கும். உடனே இங்கே வந்து நின்னுண்டு அதுமாதிரியெல்லாம் வெள்ளம் வந்து, ப்ரமாதமா தென்னை மர உயரத்துக்கு ஜலம் வீங்கி, நான் அதில் மிதக்கற மாதிரியெல்லாம் நினைச்சுப்பேன். இத்தனை ஜலம் ஒடறதே, இதுக்கெல்லாம் மையமா ஏதோ ஒர் இடம் இருக்கா? நமக்குத் தெரிஞ்சவா, தெரியாதவா எல்லாம் செத்துப் போனப்பறம் அவா அஸ்தியெல்லாம் கரைச்சிருக்குமே, அதெல்லாம் ஒண்ணுகூடி, அங்கே, அந்த நடு வயித்துலே தானே தங்கியிருக்கும்?— சொல்லுங்கோ, சும்மாயிருக்கேளே!”

“உம்—சொல்லு. உனக்கு இன்னும் என்னென்ன தோன்றுகிறதோ அதெல்லாம் சொல்லு.”

“ஏன், உங்களுக்குச் சிரிப்பாயிருக்கா?”

“இல்லை இன்பமயமாயிருக்கிறது உன் சொல் சொல்வதெல்லாம் சொல், சொல்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/20&oldid=1033381" இலிருந்து மீள்விக்கப்பட்டது