பக்கம்:அஞ்சலி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196 லா. ச. ராமாமிருதம்

கடிகாரத்தின் மணி அடித்தது. அதன் சப்தம் என் மார்பில் ஓங்கி அறைந்தது. திடுக்கென மெளனம் சூழ்ந்தது. நான் களைப்புடன் படுக்கையில் சாய்ந்தேன். ஊ—ஹூம். இனி நான் தேடுவதற்கு உண்மையான பதில் கிடைக்காது. நானும் அவளும் லயித்துக்கொண்டிருந்த அந்த நுட்பமான சுருதி கலைந்துவிட்டது. மறுபடியும் அந்த சுருதி கிட்டாது. அந்தரத்தில் வடிவமாகி, அந்தரத்திற்குச் செல்லும் நூலேணியில் பாதி ஏறியும் விட்டபின், அந்தச் சதிகாரச் சப்தம் வாள்போல் ஏணியையே அறுத்தாகிவிட்டது. அந்தக் கடிகாரத்திற்கு எப்பவுமே ஏளனம் தான். மணி ஒன்றென்றால் பன்னிரண்டு அடிக்கும். பன்னிரெண்டானால் மூன்று அடிக்கும்.

“காயத்ரீ.”

“என்ன?”

“நான் விரும்பிய அளவில் கிஞ்சித்தேனும் இருக்கும் அல்லவா? இன்றைக்கில்லாவிட்டாலும் என்றேனும்.”

“இதென்ன இந்தப்பேச்சு? எனக்கு அலுத்துப்போச்சு வால்மீகி. என்னவோ பூனை தன் வாலையே தான் சுற்றிச் சுற்றி வருகிறாப்போல—”

வாஸ்தவந்தான். நான் ஏன் இவளைப் பிச்சை கேட்கிறேன்?

கிளுக்கென்று சிரிப்பு அவள் திக்கிலிருந்து ஒலித்தது.

“இல்லை எனக்கு ஒன்று நினைப்பு வந்தது. உன்னை நான் ‘வாங்கோ போங்கோ’ன்னு மரியாதை வைத்துப் பேசவில்லையேன்னு உனக்கு வருத்தம் உண்டா?”

“எனக்கு உன் மரியாதை வேண்டாம்.”

எனக்குச் சற்றுக் கோபம்தான் வந்தது. அவள் என்னைக் கேலி செய்வது போலும் தோன்றிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/206&oldid=1033500" இலிருந்து மீள்விக்கப்பட்டது