பக்கம்:அஞ்சலி.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரி 199

பல சமயங்களில் காயத்ரியின் தாயார் மெய்யாகவே காயத்ரிக்குத் தாயார் தானா, என்று நான் வியப்புறுவதுண்டு. குள்ளஜாதி மாடுபோல் பருத்துக் கட்டை குட்டையான உடல். முகத்துச் சதையில் புதைந்து இடுங்கிப்போன கண்களில் ஒருதரமேனும் நான் கனிவு கண்டதில்லை. சுமுகத்தையே கொன்றுவிட்டு சூன்யக்காரி போல் கடுகடுவென்றிருப்பாள். ஒருவேளை அப்படியிருந்தால்தான் தோரணையென்று பாவித்தாளோ என்னவோ? கம்மிப்போய் எப்பவும் இரட்டைக் குரல் பேசும் தோரணையையும், நடந்துகொள்ளும் பாவனையையும் பார்த்தால், கடவுளிடம் உலகத்தையே விலைபேசி வாங்கி விட்டதாகத் தோன்றும். ஆனால் காயத்ரியின் தகப்பனார் கடனிலேயே மூழ்கிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. “ஸீஸ"னுக்கு ஸீஸன் தவறாமல் குதிரைப் பந்தயத்தில் சுளை சுளையாய்ப் பணத்தைத் தோற்பதாகக் கேள்வி. அவர் செலவுகளும், சிரமப்பட்டு காப்பாற்ற முயலும் அந்தஸ்துமே கட்டுக்கடங்காத குதிரையாய் அவர்கள் குடும்பத்தைச் சரிவில் இழுத்துக்கொண்டு போயிருந்தன. ஆனால் அவரோ அவர் மனைவியோ அவர்களுடைய பொறுப்புக்களில் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை. காற்றில் கட்டிய கோட்டை...திரிசங்கு சுவர்க்கம்...”

பிடிக்காதவர்களைப் பற்றி எண்ணினால் பிடிக்காதன தான் நினைவுக்கு வருகின்றன. என்னுடைய வெறுப்பான சிந்தனையை அவள் குரல் இடைமறித்து வெட்டியது.

“என்ன வேணுமானாலும் சொல்லு. எனக்குப் பிடிக்கவில்லை.”

“Alright. பிடிக்க வேண்டாம். என்ன செய்யப் போகிறாய்?”

என்னவோ முனகினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/209&oldid=1033502" இலிருந்து மீள்விக்கப்பட்டது