பக்கம்:அஞ்சலி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தரங்கிணி 11

“அப்புறம் இவாளெல்லாம் மறுபடியும் அந்த நடு வயத்திலிருந்தே உசிரோடே வெளிப்பட்டு எங்கேயாவது பிறந்துண்டிருப்பாளோன்னோ? அந்த ஜலத்தைத்தானே வயலுக்குப் பாய்ச்சி, அந்த ஜலம் ஊறித்தானே பயிர்கள் வளர்ந்து, அப்புறம் அந்தம் பயிரால்தானே நாம் உயிர் வாழ்கிறோம்? அந்த உயிர் தானே மறுபடியும் மறுபடியும் நம் வயிற்றில் உயிர் வைக்கிறது.

“ஒருதடவை ஊரில் வாத்திபேதி வந்தது. உசிர்களைச் சுருட்டிண்டு போச்சு. ‘இந்த ஆற்று ஜலம் அசுத்தப்பட்டுப் போச்சு, இதை ஒத்தரும் உபயோகப்படுத்தக் கூடாது'ன்னு தண்டோரா போட்டு, பாராகூடப் போட்டுட்டா. ஆனால், எனக்கு அப்படியெல்லாம் தோணல்லே.

“நம்ம அம்மா என் தாய், தன் குழந்தையை அப்படித் தின்னுடுவாளா என்ன? ஒருநாள் மத்தியான்னம் இங்கே வந்தேன். நல்லவேளையா ஆள் ஒருத்தரும் இல்லை. ஜலம் என்றைக்கும் போல்தான், நிறைஞ்சு தாராளமா பரவி ஓடிண்டு இருந்தது. நான் வேணும்னு கரையோரமா கவிழ்ந்து படுத்து, ஆடு மாடு குடிக்குமே அது மாதிரி வாயை நேரே ஜலத்தில் வெச்சு உறிஞ்சி வயிறு நிறைய குடிச்சுட்டு வீட்டுக்கு ஒடியே வந்துட்டேன். என்னை ஒண்ணும் பண்ணல்லே. அதுக்கென்ன சொல்றேள்?”

“நீ தரங்கிணி.”

“நான் பார்க்கிற, பழகற மனுஷாளையும் இந்த ஜலரூபமாய்த்தான் புரிஞ்சுக்கறேன். எந்தெந்த விதமா, எப்படி எப்படி, எந்த அளவுக்குன்னு எல்லாம் கேட்கா தேங்கோ எனக்குச் சொல்லத் தெரியல்லே. ஆனால் அப்போ மொதக்கொண்டு அப்படித்தான் நினைசுப்பேன்.

“என் சிநேகிதி ஒருத்தியிருந்தாள். அவள் ஜலம் மாதிரி ‘கிளுக் கிளுக்’குன்னு சிரிப்பாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/21&oldid=1033382" இலிருந்து மீள்விக்கப்பட்டது