பக்கம்:அஞ்சலி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200 லா. ச. ராமாமிருதம்

“ஏதாவது சொல்ல வேணுமென்றிருந்தால், பளிச்சென வெளிச்சமாய்ச் சொல்லு. மொண மொணக்காதே” கோபம் குறுகுறுவென்று என் நெஞ்சில் எங்கோ எலி பிராண்டிற்று. அதனால் நெஞ்சுகூட வலித்தது.

“ஆமாம், ஏற்கெனவே சொல்ல வேண்டாம். இங்கே வந்தது முதல் நான் எங்கே போயிருக்கிறேன்? என் வீட்டில் இப்படித்தான் இருப்பேனா? நானும் என் தங்கைகளும் ஊரைக் கொட்டை பரப்பியிருப்போமே! வாரம் ஒரு சினிமா தவறமாட்டோம். என்ன குஷியாய் பொழுது போகும் தெரியுமா? அக்கம்பக்கத்தில் இங்கே பேசக்கூட ஒருவருமில்லை. நீதான் என்னைத் தங்கச்சங்கிலிபோட்டுக் கட்டி வைத்திருக்கிறாயே! வால்மீகி, நான் என்னமோ நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால் நிஜமா எனக்கு இங்கே bore அடிக்கிறது...”

எனக்கு அப்பொழுது திடீரென ஒரு விநோதமான எண்ணம் உதித்தது. ஓடிக் கொண்டிருக்கும் காற்றை நான் இழுத்துப்பிடித்து வைத்துக்கொண்டு, அத்துடன், “நீ என் மூச்சு—நீ இல்லாமல் நான் இருக்க முடியாது. உனக்கும் என்மேல் அதேமாதிரி இருக்கிறதா? இல்லாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் உன்னுடைய அரூபத்தில் என்னுடைய வித்து ரூபமாயிருக்கிறது” என்று என்னென்னவோ பேரம் பேசிக்கொண்டு, கண்ணும் காதும் நெஞ்சும் இலாது, உயிருக்கு உயிராய்த் தான் இயங்கினாலும் தனக்கென்று ஒரு உயிர்த்தன்மை இலாத காற்றோடு ஏதோ பிதற்றிக் கொண்டிருக்கிறேன். கண்ணுக்கும் புலனாயும் புலனாகாததுமாய் எண்ணிலா ஜீவராசிகளும் அணுக்கோசங்களும் சதாசர்வகாலம் காற்றில் நீந்தியபடி தான் இருக்கின்றன. ஆனால் காற்றுமாத்திரம் தனிமலடு.

ஓடும் காற்றை இழுத்துப் பிடித்துக்கொண்டால் அது விஷமாய்த்தான் மாறிவிடுகிறது. எனக்குக் குப்பென்று வேர்த்தது. மூச்சு திணறிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/210&oldid=1033503" இலிருந்து மீள்விக்கப்பட்டது