பக்கம்:அஞ்சலி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202 லா. ச. ராமாமிருதம்

“ஆ மிஸ்டர் வால்மீகி. வந்துவிட்டீர்களா? வாருங்கள் வாருங்கள்!—” டாக்டர் எங்களை வரவேற்கிறார். “நர்ஸ்! இந்த அம்மாவை உள்ளே கூட்டிக்கொண்டு போ! உட்காருங்கள் மிஸ்டர் வால்மீகி, என்ன நீங்கள் நாளுக்கு நாள் உள்ளுக்கு வாங்கிக்கொண்டு போகிறீர்கள்? உங்கள் முகம் நன்றாயில்லையே!”

“எல்லாம் கவலைதான்” என்கிறேன். அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்டு, “No, No, No!” டாக்டர் அடித்துப் பேசுகிறார்.

“இதென்ன எல்லோருக்கும் நேருகிறதுதானே! இதைப் பற்றி கவலைப்பட்டு சாத்தியப்படுமா? என்ன உங்கள் கண்களில் ரத்தமில்லை. நாடி பதட்டமாய் பேசுகிறது.ஜூரம் இருக்கிறதா? I must examine you”

“எனக்கென்ன அவசரம் டாக்டர்?” என்றேன் அலுப்புடன். “நான் அப்புறம் வந்து உடம்பைக் காண் பித்துக் கொள்கிறேன்.” என் கவனம் கலைய ஆரம்பித்து விட்டது. உள்ளிருந்து அவள் முக்கல்களும் முனகல்களும் கேட்கையில் என் மனம் சஞ்சலிக்க ஆரம்பித்துவிட்டது.

“நீங்கள் மனசை வாட்டிப்பதில் பிரயோசனமில்லை. அது அது அதனதன் வேளையில்தான் வரும். இன்னும் நிஜவலிக்கு எவ்வளவோ நேரமிருக்கிறது. இதுதான் முதல் பிரசவம், சிரமமாய்த்தானிருக்கும்—”

காயத்ரீயின் தாயார் உள்ளிருந்து வந்தாள். அவள் முகம் கல்லாலடித்தாற்போல கடினமாய், உக்கிரமாயிருந்தது. குற்றம் சாட்டும் கண்களுடன் என்னைப் பார்த்தபடியே, “என் பெண் ரொம்பக் கஷ்டப்படுகிறாள்” என்றாள். கம்மிப்போய்க் கர்ண கடுரமாய் இரட்டைக் குரல் பேசும் கட்டை ஆண் குரல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/212&oldid=1033505" இலிருந்து மீள்விக்கப்பட்டது