பக்கம்:அஞ்சலி.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 203

“டாக்டர், என் பெண் ரொம்பவும் துடிக்கிறாள்.”

“துடிக்கட்டும்.”

அவள் பார்வை அவர் மேல் திரும்பிற்று. முகம் இறுகிற்று. கண்கள் ஊசிமுனைகளாய்ச் சிறுத்தன.

“துடிக்கட்டும்; துடித்தால் ஒன்றும் மோசமில்லை. மூன்று மாதங்களுக்கு முன்னால் நீங்கள் வந்தபோதே சொன்னேன். ‘உங்கள் பெண் நன்றாய்க் குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய வேண்டும். உடம்பு வணங்கி தேகத்தை உழைக்க வேண்டும். அப்போத்தான் பிரசவ வேளைக்குச் செளகரியமாயிருக்கும்’ என்று கேட்டேளோ?”

காயத்ரியின் தாயார் நிமிர்ந்து கம்பீரமாய் நின்றாள். உலகத்தை விலை பேசுகையில் கடவுள் முன்னிலையில் அப்படித்தான் நின்றிருப்பாள்.

“வீட்டில் சமையல்காரி இருக்கையில் என் பெண் ஏன் வேலை செய்யனும்?”

“Very good உங்கள் பெண்ணின் குழந்தையை உங்கள் சமையல்காரி பெறுவதற்கு நாங்கள் இன்னும் புது வழி கண்டுபிடிக்கவில்லை.”

அவள் தலையை ஒரு வெட்டு வெட்டிக்கொண்டு உள்ளே சென்றாள்.

டாக்டர் சிகரெட்டைப் புறங்கையில் தட்டிக் கொண்டார்.

“இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. நான் மந்திரவாதியா, டாக்டரா? மிஸ்டர் வால்மீகி, எனக்கு வரவர ஒன்றுமே பிடிக்க வில்லை. இந்தக் காலத்து சந்ததியே No good. இந்த சந்ததிக்குப் பொறுப்பு இல்லை. ஒத்துழைப்பு இல்லை. லட்சியங்களில்லை. மனமில்லை. நான் என்ன செய்ய முடியும்? இயற்கை அதன் வழியில் வேலை செய்ய,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/213&oldid=1026462" இலிருந்து மீள்விக்கப்பட்டது