பக்கம்:அஞ்சலி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 205

இது ஒரு சபிக்கப்பட்ட சந்ததி. தாய்மைக்கு லாயக்கற்றவர்கள். தாயார்களாவது ஒரு சாபம். அவர்களுக்குக் குழந்தையைக் கொடுப்பவர்களும் குற்றவாளிகளே. சமூக சத்ருக்கள், That is it, a doomed generation.”

கைச் சிகரெட்டை நசுக்கிவிட்டு, இன்னொரு சிகரெட்டைப் பற்றவைத்தார். அவர் என்னோடு பேசவில்லை. வாய்விட்டுச் சிந்தித்துக் கொண்டிருந்தார்.

“வெறும் குளோரோபாரம், மாத்திரை, மருந்துப் புட்டிகள், ஊசி இவைகளால் மாத்திரமே எல்லாம் ஆகிவிடுமா? மனமும் வேண்டும். கர்ப்பந்தரித்தால் மட்டும் போதுமா? அந்தப் பிள்ளையைப் பெற்று எடுத்து, வளர்த்து, மனிதனாக்க மனம் வேண்டும். ஆசை வேண்டும். பொறுப்பு வேண்டும். தைரியம் வேண்டும். ஆத்ம பலம் வேண்டும். இந்த லட்சியங்களில்தான் இந்த உயிர் நூல் வளர்கிறது. என் டாக்டர் பட்டத்தால் அல்ல. பிள்ளையா, சாணியா? என்னவென்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்? இந்த விஷயத்தில் மனிதன் மிருகங்களிடம் பிச்சையெடுக்க வேண்டும், மிஸ்டர் வால்மீகி—”

அவர் கண்கள் கொதித்தன.

“என் தாயார் என்னைப் பெற்றபோது இந்தக் கத்தி கவடா எல்லாம் இருந்ததா என்ன? மிஸ்டர் வால்மீகி, இன்னும் நேரமிருக்கிறது. உங்களுக்கு நான் ஒரு சின்னக் கதை சொல்லப்போகிறேன், நான் பிறந்த கதை.

சிகரெட்டை எறிந்துவிட்டுக் கையைக் கோர்த்துக் கொண்டு அவர் நாற்காலியில் சாய்ந்தார்.

“நான் கிராமத்தில் பிறந்தேன். என் தகப்பனார்தான் வீட்டுக்கு மூத்தவர். கூடப்பிறந்த தம்பிகள் நாலைந்து பேர்கள். அவரவர்களுக்கு காலா காலத்தில கலியாணமாகி, வேண்டிய குழந்தைகுட்டிகள் பிறந்தன. எல்லாம் ஒரே கூட்டுக் குடும்பம். பாட்டிதான் குடும்பத்துக்கு அதிகாரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/215&oldid=1033506" இலிருந்து மீள்விக்கப்பட்டது