பக்கம்:அஞ்சலி.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214 லா. ச. ராமாமிருதம்

“விளங்காமல் என்ன?”

“காயத்ரீ, இங்கு உனக்கு என்ன பிடிக்கவில்லை?”

அவள் முகம் மரக்கட்டைபோல், உணர்ச்சிகளின் பொலிவு இலாமல், மாறிவிட்டது.

“நான் என்னவோ நினைத்துக்கொண்டு வந்தேன். ஆனால் நான் நினைத்தபடியில்லை.”

“நீ என்ன நினைத்துக்கொண்டு வந்தாய்? நீ நினைத்தபடி என்ன இல்லை?”

“எனக்கு சொல்லத் தெரியவில்லை. விரல்களைச் சொடுக்கினாள். “நீ என்னைக் கெட்டியாய் இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறாய். நான் எந்தக் கட்டுப்பாடு மின்றி எதேச்சையாய் வளர்ந்தவள். எந்தக் கட்டுக்கும் என்னால் கட்டுப்பட முடியவில்லை; என்னை மன்னித்து விடு.”

“நீதியே யிலாது நீ வளர்ந்துவிட்டபடியால், உன்மேல் உனக்குக் கட்டில்லாமல், உனக்கும் பிறர்க்கும் எவ்வளவு ஹானி நீ இழைக்கிறாய் என்று தெரியுமா? அவள் ஒன்றும் பேசவில்லை. சுவர் மேல் ஒரு முகத்தின் படம் தோன்றி அழிந்தது. முகத்துச் சதையில் சீயக்காய் விதைகள் புதைந்து, சுமுகத்தையே கொன்றுவிட்டு, கடு கடுத்துக்கொண்டு சூனியத்தைச் சிந்தும் கண்கள் அந்த உருவை மனத்திலிருந்து அழிக்கக் கண்களைக் கசக்கிக் கொண்டேன்:

“காயத்ரி. ஏன் சும்மாயிருக்கிறாய்? ஏதாவது பதில் சொல்லேன்!—”

“பதில் சொல்ல என்ன இருக்கிறது?” அலுத்துக் கொண்டாள். “நம் இருவருக்கும் சரிப்படவில்லை. அவ்வளவுதான்!”

“அப்படி என்ன நேர்ந்துவிட்டது?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/224&oldid=1033512" இலிருந்து மீள்விக்கப்பட்டது