பக்கம்:அஞ்சலி.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216 லா ச. ராமாமிருதம்

வீட்டை விட்டுத் தலைகால் புரியாமல் ஓடினேன். சாலையோரத்தில் ஒரு மாந்தோப்பு. அங்கு போய் ஒரு மரத்தடியில் குப்புற விழுந்தேன். நேரம் சென்றது. எனக்குத் தெரியாது. அப்படியே மூர்ச்சையாய்த்தான் ஆனேனோ, தூங்கிவிட்டேனோ? மண்டைக் கொதிப்பு கொஞ்சம் கொஞ்சமாய் அடங்க ஆரம்பித்தது. மல்லாந்து புரண்டேன். குளிர்ந்த காற்று புருவங்களை ஒற்றியது

என் பக்கத்தில் ஒரு அணில், உலர்ந்த சருகுகளின்மேல் வாலைத் தூக்கிக்கொண்டு ஓடியது. இரு குருவிகள் ஜோடியாய் அருகே தத்திவந்து என்னை வியப்புடன் பார்த்தபடி வளவள வென்றன. புயலின் வேகம் தணிந்து எண்ணங்கள் தெளிய ஆரம்பித்தன.

காயத்ரி என்ன கவலைப்படுகிறாளோ? சே, என்ன இப்படி மிஞ்சிக் கத்திவிட்டேன்! இரண்டுபேருமே அசட்டுத் தனமாய் நடந்துகொண்டு விட்டோம். அவளுக்கும் இப்போ அவசரம் தணிந்திருக்கும். ஒருவேளை அவளிடம் நியாயம் இருக்கிறதோ, என்னவோ? இருக்கிற இடத்திலேயே இருந்துகொண்டு பார்க்கிற முகத்தையே பார்த்துக்கொண்டிருப்பதும் அலுப்புத்தான். இடமாற்றமாய் வெளிப்பிரயாணம் செய்து திரும்பினால் நிலைமை சரியாகிவிடும். குழந்தை உயிரோடு தங்கியிருந்தால் இவ்வளவு கசப்பு இருக்காதோ என்னவோ? ஆமாம், அதுதான். முடிந்தால் இன்றிரவே வண்டியேறுவோம். எங்கே? எங்கேயாவது போகிறது. எங்கே போனால் என்ன?

என்னைச் சுற்றி நன்றாய் இருட்டிவிட்டதை உணர்ந்தேன். அட, இவ்வளவு நேரம் ஆகிவிட்டதா என்ன? உடம்பைத் தட்டிக்கொண்டு அவசரமாய் எழுந்தேன்.

வீடு இருண்டு, ஒரு விளக்குகூடப் போடாமல், மொத்தாகாரமாய் என்முன் எழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/226&oldid=1033514" இலிருந்து மீள்விக்கப்பட்டது