218 லா. ச. ராமாமிருதம்
கொன்றுவிட்டாய். என்னோடு வாழும் இஷ்டத்தைவிட என்னைக் கொன்றுவிட்ட பெருமை உனக்குப் பெரிதாயிருந்தால் அதையே கொண்டாடிக் கொள். ஆனால் உன்னைக் கொன்றுகொண்டபின் என்னைக் கொன்றாய். ஆனால், இந்த நாளை நினைத்து ஒருநாள் நீ தவிப்பாய். ஒருநாள்—”
இருமல் என்னை முறித்தது. வாயிலிருந்து சிவப்பாய் ஒரு சொட்டு ஜன்னல் சட்டத்தின்மேல் விழுந்தது. என் பார்வை இருண்டது. தலை சுற்றி அப்படியே கீழே விழுந்துவிட்டேன்.
வர வர நேரத்தின் வரைகளும் மாறுதல்களும் தெரிவதில்லை. இந்த நிமிஷம் இப்படியேதான் நின்றுவிடுமா? அல்லது அசைந்தாடி இன்னொன்றில் புகுந்துவிடுமா? படுக்கையில் படுத்தபடியே கிடக்கிறேன். என்ன யோசனை செய்கிறேன்? அறியேன். அதற்குள் காலை பகலாய் வளர்ந்துவிடுகிறது. எப்பொழுது வேளை இவ்வளவு முற்றிற்று எனத் திகைக்கையிலேயே பகல் மாலையில் சாய்கிறது. மாலை அந்தியில் மறைகிறது. அந்தி இரவில் கரைந்துவிடுகிறது.
இரவு ஒரு ப்ரம்மாண்டமான பட்சி. அதன் கால் நகங்கள் என் மார்பில் பதிகின்றன. விடிந்ததும் நகக் குறிகள் சிவப்பாய் மார்பில் தென்படுவது போலும் எனக்குத் தோன்றுகிறது. இரவு ஒரு ப்ரம்மாண்டமான பட்சியாய் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பகல் குறுக்கிட்டதும், இரவு தன் சிறகுகளை விரித்து மறைந்துவிடுகிறது. நாளுக்கு நாள் நான் லேசாகிக் கொண்டு வருகிறேன், வரவர என்னுடலில் சதை, தசை, ரத்தம் எதுவுமே இல்லைபோல் தோன்றுகிறது. நான் பட்சியாய் மாறிக்கொண்டிருக்கிறேன். பகல்கள் குறுகி