பக்கம்:அஞ்சலி.pdf/229

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காயத்ரீ 219

இரவு எப்பொழுது வரும்? இரவு என்னை பட்சியாக்கிக் கொண்டிருக்கிறது. பகலின் இடைமறிப்பிலாத இரவு ஒன்று என்று வருமோ அன்று நான் பரிபூரணமான பட்சி யாகிவிடுவேன்.

“மிஸ்டர் வால்மீகி, உங்களைப் பார்க்க யாரோ வந்திருக்கிறார்கள்” என்கிறாள் நர்ஸ். கொஞ்சம் கண்ணைத் திறந்து பாருங்கள்.”

“யார்?” என்கிறேன். கண்ணைத் திறக்க எனக்கு சக்தியில்லை. இப்பொழுது விருப்பமும் இல்லை. என் குரலே எனக்கு எங்கிருந்தோ கேட்கிறது.

“நான்தான். வால்மீகி—”

“அப்பா!”

கண்ணைத் திறக்க முயல்கிறேன். ஆனால் இமைகளைத் தூக்கக்கூட எண்ணத்தில் வலிமையில்லை.

“அப்பா, எனக்கு ரொம்பக் களைப்பாயிருக்கிறது.”

“எனக்குத் தெரிகிறது.” அப்பாவின் குரல்தான் கேட்கிறது. அவருடைய பிரசன்னத்தைத்தான் உணர முடிகிறது. அவரைப் பார்க்க முடியவில்லை.

அப்பா நாற்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு உட்காருகிறார்.

“அப்பா, உங்களிடம் பேச எவ்வளவோ இருக்கிறது; ஆனால் சக்தியில்லை. அவசியமுமில்லை. நேரமும்தான் இல்லை.”

“எனக்குத் தெரியும்.”

“அப்பா இருமினால் ரத்தம் வருகிறது. ஆயிரம் ஊசிகள் குத்தினாற்போல் மார் வலிக்கிறது. ஜலங்கூட விழுங்க முடிவதில்லை. மூச்சு சிரமமாயிருக்கிறது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/229&oldid=1033515" இருந்து மீள்விக்கப்பட்டது