பக்கம்:அஞ்சலி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தரங்கிணி 13

உத்தரவு போட்டுட்டா, வரவா போறவா எல்லோரோடேயுமே கையைக் கொட்டி சிரிச்சுண்டு ஜலம் மாதிரி கலகலப்பாயிருப்பாள். -

“எங்கள் ஊருக்குப் புதிசா ஒரு போஸ்ட்மேன் வந்தான்—”

“உம். சரி— இந்தக் கதை எப்படி முடியும் என்று எனக்குத் தெரியும்.

“எல்லாத்தையும் சொல்றாப்போலே இதையும் உங்களுக்கு நான் சொல்றேன். அப்புறம் அவள் ஒருநாள் ஆத்துலேயில்லை. அந்தத் தபால்காரனுமில்லை. அவன் ஏதோ மணியார்டர் பணம் எத்தையோ சுளையம் பண்ணிண்டு ரெண்டுபேருமே ஒடிப் போயிட்டா.”

தரங்கிணி தலை குனிந்து மண்ணை அள்ளி ஆஹீதி சொரிய ஆரம்பித்தாள்.

“மூணு மாதம் கழிச்சு இதில்தான் அவள் உடல் மிதந்து வந்தது, தேகத்தில் ஏதோ படை படையாய்ப் பரவியிருந்தது. நான்கூட அவளை அப்போ பார்த்துட்டேன். எப்படியும் அவள் என் சிநேகிதி இல்லையா! இப்போயிருந்தால் இன்னும் என்னைவிட மூணு நாலு வயது பெரியவளாயிருப்பாள்; அவ்வளவுதான். நானும் அவளும் ஒரு சமயம் சாயந்திரம் இந்த ஆற்று மணலில் உட்கார்ந்துண்டு, சின்ன வயதின் சிறு பிள்ளைத்தனத்தில், திடீர்னு ஒருவர்மேல் ஒருவருக்குப் பால் பொங்கி வழியும் பிரியத்தில், ஒத்தரை விட்டு ஒத்தர் பிரியவே போறதில்லை, அப்படியே கல்யாணமாகி அவா அவா தனித் தனியாப் பிரிந்து போனாலும், கடிதாசு எழுதிண்டு எங்களுடைய அருமையான சினேகிதத்தை எப்படி எப்படி வளர்ப்போம்னு கையடிச்சுச் சத்தியம் பண்ணின்டதெல்லாம் எனக்கு நினைவு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/23&oldid=1033385" இலிருந்து மீள்விக்கப்பட்டது