பக்கம்:அஞ்சலி.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

222 லா. ச. ராமாமிருதம்

 “தெரியும்.”

“அப்பா என்னை விட்டுப் போகாதேயுங்கள்.”

“வால்மீகி, போகமாட்டேன். நீ இறக்கும்போது உன் உக்கத்தில் துணையாயிருக்கவே வந்திருக்கிறேன். உன் காரியம் ஆனதும் உன் விருப்பத்தை நிறைவேற்றி விட்டு நான் போய்விடுவேன். என் ஒரே பிள்ளை என்னை முந்திக்கொள்ளும் சோகத்திற்கு அழவே நான் வந்திருக்கிறேன். ஏனென்றால் ஆவியின் பிரிவிற்கு சிந்தும் கண்ணீர் ஆத்மாவின் வளர்ச்சிக்கு ஊற்றும் தண்ணீர்.”

என் இமைத்திரையில் திடீரென அம்மா தோன்றினாள். வீணையை தன்மேல் சார்த்திக்கொண்டிருந்தாள். அவள் மார்த்துணி கழன்று விழுந்திருந்தது.

“வால்மீகி!” என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டே தந்தியை ஒரு தட்டு தட்டினாள். வீணையிலிருந்து ஒரு ஜோதிப் பந்து குதித்து ஜ்வலித்துக்கொண்டே என்னை நாேக்கி வந்தது. அதில் நான் தாவியேறிக் கொண்டேன்.

அம்மாவின் ரவிக்கையவிழ்ந்தது. மார்பிலிருந்து பால் கடகடவெனச் சொரிந்து என்னைக் கடலாய்ச் சூழ்ந்தது. பாற்கடலில் மிதந்தபடி நான் அம்மாவை நோக்கி விரைந்துகொண்டிருந்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/232&oldid=1033518" இலிருந்து மீள்விக்கப்பட்டது