உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அஞ்சலி.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

224 லா. ச. ராமாமிருதம்

“முகத்தை இழுத்து மூடிக்கோங்கோ!”

“ஏகா! ஏகா !!”

“நீ ஏண்டா, வீணா அலட்டிக்கறே, வேதா! அவாளே அசுரக் கூட்டம்தானே! ராக்ஷஸாள் ராத்திரி பலக்காராள்!”

அவனுக்கு ரோசம் பொத்துக் கொள்ளும். ஆனால் ஏகா கிணுங்காள்.

அம்மாவின் வார்த்தைகள் சூத்திரங்கள். ஒன்றில், சமயத்துக்கேற்ப ஒன்பது கருக்கள், அமைப்புகள், வெறும் வர்ண விசிறல்களிலேயே, புரியாவிடினும், தனக்குள் ஒன்றுபட்டதோர் இழைவுபோன்று, சம்பந்தா சம்பந்த மற்றவை போன்ற வார்த்தைகளில் வெவ்வேறு ஒலியேற்றங்கள், அர்த்தக் கூடுகள். பாம்பின் கால் பாம்பறியும். வேதா வேதனைப்படுவான். வாக்குப்பட நாக்கில் துடிக்கும் பதிலை நறநறவெனமென்று விழுங்கிவிடுவான். அது அவன் சுபாவம்:

அவன் வேதமூர்த்தி.

அவள் ஏகா.

“உங்கள் கழுத்தில் இதென்ன பூமாதிரி நீள மறு. பிறவியா?” மணவறையில், சந்திப்பின் புதிதில், ஒன்றிய பரிவின் மழலையில், ஒருவரை யொருவர் ஆராயும் அதிசயிப்பில், மஞ்சத்தில் கொஞ்சலில், மச்சத்தைத் தொட்டு கேட்டாள்.

“ஒ இதுவா? இது, இதுவரை நான் விழுங்கியிருக்கும் கசப்புகள் கண்டத்தில் தோய்ந்த கறுப்பு. இதென்ன நகம்போல் உன் நெற்றியில் வடு?”

“ஒ இதுவா? இது நான் சுருக்க எழல்லேன்னு அம்மா தோசைத் திருப்பியால் நெற்றியில் நெத்தின நெத்தல்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அஞ்சலி.pdf/234&oldid=1033520" இலிருந்து மீள்விக்கப்பட்டது